6 லட்சம் கோடி கடன் இருக்கு... வாஷிங் மெஷின் இலவசமாக எப்படி கொடுப்பார்கள் - சீமான் பொளேர்
தமிழக அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி கடன் இருக்கும் போது இலவசமாக வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பார்கள் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ரூ.6 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் எப்படி வாஷிங் மெஷின் கொடுப்பீர்கள் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசம் என்பது அறிவை வளர்க்கும் கல்வியிலும், உயிரை காக்கும் மருத்துவத்திலும், குடிநீரிலும், விவசாயிக்கு வழங்கப்படும் மின்சாரத்திலும் மட்டுமே இருக்கும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திமுக, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி அறிவிப்புகளில் இலவசங்கள் நிரம்பி வழிகின்றன. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம், ஆயிரத்து 500 என கட்சிகள் மாறி மாறி அறிவித்துள்ளன. கேஸ் சிலிண்டர் வாங்க மானியம் தருவோம் என்று திமுக கூறினால், ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்று அறிவித்துள்ளது அதிமுக. இலவச லேப்டாப், கூடவே மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசம், இலவச வாஷிங் மெஷின் உள்ளிட்ட அதிமுகவின் அறிவிப்புகளை பல கட்சியினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூரில் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மண்டல தேர்தல் அதிகாரி தேவேந்திரன் இடம் மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சீமான் விமர்சனம்
அதிகார பலம், பண பலம் கொண்ட திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே இம்முறை களம் காண்கிறோம், நிச்சயம் இதில் வெற்றியும் பெறுவோம் என்று கூறினார். எங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசம் என்பது அறிவை வளர்க்கும் கல்வியிலும், உயிரை காக்கும் மருத்துவத்திலும், குடிநீரிலும், விவசாயிக்கு வழங்கப்படும் மின்சாரத்திலும் மட்டுமே இருக்கும் என தெரிவித்தார்.

இலவசங்கள் எப்படி
ஆறு லட்சம் கோடி கடன் இருப்பதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது இலவச வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார். இலவசங்கள் கொடுக்க பணம் எங்கிருந்து வரும் என்பதற்கு திட்டத்தை வகுத்துச் சொல்லுங்கள். தமிழக அரசில் எந்தத் துறையில் கடன் இல்லாமல் இருக்கிறது? நாட்டையும் நாட்டு மக்களையும் கடனாளியாக்கிவிட்டு, மறுபடியும் மறுபடியும் இலவசம் தருவோம் என வெற்று அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

உறுதியாக போராடுகிறோம்
என் அன்பு மக்களுக்குச் சொல்வது, தேடக்கூடாது. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என வழியே இல்லாமல் தேடக்கூடாது. நாங்கள் 10 ஆண்டுகளாக உறுதியாக நின்று போராடுகிறோம். எங்களைக் கவனியுங்கள். திமுக திராவிட இயக்கத்தின் அரசியல் தாய் இயக்கம். இதிலிருந்து வந்த அதிமுக ஒருதுளிதான் திமுகவின் கொள்கையில் இருந்து மாறுபடுகிறது.

பிக்பாஸ் ஊதியம்
கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் செல்வது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்து பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வாங்கிய ஊதியமே போதும். அவர் நினைத்தால் விமானமே வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications