சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க ஆசையா? நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
சென்னை: சந்திராயன் 3 விண்கலம் வரும் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35க்கு விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் அதனை நேரில் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையம்.
சந்திரயான்-2ஐ தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் பணியை மேற்கொள்ளும் திறனை பெற்றிருக்கிறது. சந்திராயன் 3ஐ பொறுத்தவரை லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு உதவிக்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35க்கு விண்ணில் ஏவப்படும் இந்த விண்கலமானது, ஜூலை 23 அல்லது 24ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சந்திராயன் 3 விண்கலம் ஏவுதலை நேரில் பார்க்க நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் https://lvg.shar.gov.in/VSCREGISTRATIO என்ற இணையப்பக்கம் மூலம் பார்வையாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஆதார் கார்டு/ ஓட்டுநர் உரிமம்/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை/ அலைபேசி எண்/ மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட ஆவணங்களை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஹார்டு காப்பியாகவோ, சாஃப்ட் காப்பியாகவோ கையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஸ்பேஸ் தீம் செட்டப்பில் கட்டப்பட்டுள்ள லாஞ்ச் வியூ கேலரியில் ஒரே நேரத்தில் 5,000 பேர் வரை அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேலும் பார்வையாளர்கள் ஜூலை 14ஆம் தேதி திரளக்கூடும் என்பதால் அதற்கேற்ப முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications