ஏற்கனவே ஒரு TVK இருக்கே.. 3 சாய்ஸில் ‘தமிழக வெற்றி கழகம்’ பெயரை விஜய் டிக் அடித்தது எப்படி?
சென்னை: ஏற்கனவே 'TVK' என்ற பெயரில் தமிழக வாழ்வுரிமை கட்சி செயல்பாட்டில் இருக்கும்போது, விஜய் தனது அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம் ' (TVK) என பெயர் சூட்டியது எப்படி என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என பல வருடங்களாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளுக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. விஜய் சார்பாக டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். அவர் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களைச் சமர்ப்பித்து விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் விஜய், அரசியல் கட்சி தொடங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

விஜய் அறிவிப்பு: தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்த விஜய், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை. எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என விஜய் அறிவித்துள்ளார்.
TVK: ஏற்கனவே 'TVK' என்ற பெயரில் பரவலாக அறிமுகமான அரசியல் கட்சி செயல்பாட்டில் உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தி.வேல்முருகன் தொடங்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி, அப்போது முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் தற்போது பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார்.
இந்நிலையில், ஆங்கிலத்தில் அதே எழுத்துகள் வரும் வகையில், விஜய்யின் கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில், விஜய் நடத்திய ஆலோசனையின்போது, கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பது பற்றி விவாதித்துள்ளனர். அப்போது, 3 பெயர்களை பரிசீலித்ததாக கூறப்படுகிறது.
விஜய் சாய்ஸில் 3 பெயர்கள்: தமிழக முன்னேற்றக் கழகம், விஜய் மக்கள் கழகம், தமிழக வெற்றி கழகம் ஆகிய பெயர்கள் விஜய்யின் டாப் சாய்ஸில் இருந்துள்ளன. இதில் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைக்க விஜய் விரும்பினாலும், கட்சி பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது 'TMK' என வரும். பேச்சு வழக்கில் சொல்லும்போது, DMK, TMK ஆகியவை ஒன்று போலவே ஓலிக்கும் என்பதால் அந்த பெயர் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேசமயம், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை ஆங்கிலத்தில் சொல்லும்போது TVK என வந்தாலும், அந்த பெயரில் ஏற்கனவே ஒரு கட்சி செயல்பட்டு வந்தாலும், தமிழில் 'த.வெ.க' என்றுதான் வருகிறது, பரவாயில்லை என்று முடிவு செய்த விஜய், இறுதியாக அந்தப் பெயரை தனது அரசியல் கட்சிக்கு வைக்க முடிவு செய்தாராம்.
விஜய் என்றால் வெற்றி: வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் தான் 1984ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக, தனது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் விஜய். விஜய் என்றாலும் வெற்றி தான். அந்த அர்த்தத்தில், விஜய் என்ற பெயர் கட்சி பெயரில் இருப்பதற்கு பதிலாக வெற்றி என இருக்கட்டும் என முடிவு செய்தததாக கூறப்படுகிறது.
கட்சிக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக, மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமல்லாது, தனக்கு நெருக்கமான மேலும் சிலரிடமும் விஜய் கருத்துக் கேட்டதாகவும், அதன்படியே கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.












Click it and Unblock the Notifications