"டரியல்" பாஜக.. "புலிக்குட்டி" வெளியே வரப்போகுது.. புள்ளி வைத்த உதவியாளர்.. கோலம் போடும் திமுக?
எடப்பாடி பழனிசாமிக்கு கொடநாடு விவகாரத்தில் சிக்கல் வரப்போகிறதா
சென்னை: அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்பது பொதுவான வாசகமாக இருந்தாலும், சில சமயம், நிரந்தர "நண்பர்கள்" என்று சொல்லக்கூடிய எதிர்க்கட்சிகளும் இருக்கவே செய்கிறது.
பூங்குன்றன், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிகாரம் மிக்கவராக இருந்தவர்... அதாவது, சென்னை மற்றும் கொடநாடு பங்களாவில் இவர் அனுமதி இருந்தால் தான் ஜெயலலிதாவை சந்திக்க முடியும் என்ற நிலை அப்போது இருந்தது.
பல்வேறு முக்கிய கடிதங்கள், டாக்குமென்ட்டுகள்.. முக்கிய பிரமுகர்கள் சந்திப்பை பூங்குன்றன் தான் முடிவு செய்து வந்தார்...

பூங்குன்றன்
அந்தவகையில், கொடநாடு பங்களாவில் டாக்குமெண்ட்கள். அதிமுக தொடர்பான முக்கியமான ஃபைல்கள், தேர்தல், கட்சி தொடர்பான ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள்.. இவைகள்தான் கொள்ளை போயுள்ளது. அதனாலேயே கொலையும் நடந்துள்ளது. எனவே, அங்கு வைக்கப்பட்டிருந்த பைல்கள், ஹார்டுடிஸ்க்குகள் என்னென்ன என்பது குறித்துதான், பூங்குன்றனிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.. பங்களாவில் இருந்த பொருட்கள் எங்கே போனது? பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பூங்குன்றனிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான போலீசார் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

விசாரணை
ஏற்கனவே 2 முறை நடந்த விசாரணையின்போது ஏகப்பட்ட தகவல்களை பூங்குன்றன் சொல்லி இருந்தாராம்.. இருந்தாலும் மேலும் சில சந்தேகங்கள் இருந்ததால், 3வது முறையாக விசாரிக்கப்பட்டார்.. அப்போதுதான், பங்களாவில் இருந்த ஆவணங்கள், பத்திரங்கள் எங்கு கடத்தி செல்லப்பட்டது என்பது பற்றி குறித்து சில விவரங்களை பூங்குன்றன் சொன்னாராம்..இதைதவிர மிக முக்கியமான ஆதாரங்கள் சிலவற்றையும் தந்தாராம்..

எடப்பாடி பழனிசாமி
பூங்குன்றனிடம் விசாரணை மற்றும் ஆதாரங்கள், வாக்குமூலங்கள் என அனைத்துமே ரிப்போர்ட் ஆக கோட்டைக்கு பறந்துள்ளதாம்.. இதைவைத்து எடப்பாடி தரப்புக்கு செக் வைக்கும் காய் நகர்த்தலும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.. ஒருவேளை எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி நிலை ஏற்படும் பட்சத்தில், அது திமுகவுக்கு மட்டுமல்லாமல் சசிகலாவுக்கும் சேர்த்து குஷியை ஏற்படுத்தக்கூடும்.

ஓபிஎஸ்
சசிகலாவை பொறுத்தவரை, எடப்பாடி மட்டும்தான் சிக்கலாக இருக்கிறார்.. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை பிரச்சனையே இல்லை.. அதேபோல ஸ்டாலினை பொறுத்தவரை எடப்பாடி மட்டும்தான் சிக்கலாக இருக்கிறார்.. ஓபிஎஸ் சிக்கலே இல்லை.. பூங்குன்றத்தை விசாரணைக்கு அழைத்ததுமே, சசி தரப்புக்கு பெருத்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டதாம்.. நிச்சயம் கட்சியை கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்கு போட்டு வருகிறாராம்.

டேமேஜ்
கடந்த கால ஆட்சியில் திமுகவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது எடப்பாடி பழனிசாமி தரப்புதான்.. இப்போதுகூட, திமுக ஆட்சியில் ஊழல் என்றும், திமுகவை டேமேஜ் செய்து கொண்டுமிருப்பது எடப்பாடி பழனிசாமிதான்.. அதனால் கொடநாடு விவகாரத்தில் வலுவான, உறுதியான தகவல்கள் ஆதாரங்கள் சிக்குமா என்பதுதான் திமுகவின் எதிர்பார்ப்பாக உள்ளது.. அதேசமயம் அனைத்தையும் சட்டப்பூர்வமாகவே, அதிகாரப்பூர்வமாகவே, வழக்கு, விசாரணை நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

எடப்பாடி சிக்கல்
எடப்பாடிக்கு சிக்கல் ஏற்படுத்தும் பட்சத்தில், சசிகலா & ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து கட்சியை கைப்பற்றினாலும் அதை திமுக ஏற்கவே செய்யும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.. கடந்த 6 மாத காலமாகவே, திமுகவுக்கு மாற்று பாஜக என்று அண்ணாமலை சொல்ல ஆரம்பித்துள்ளார்.. அதற்கேற்றபடி, அதிமுகவையும் முந்திக் கொண்டு வந்து, திமுகவை விமர்சித்தும், குற்றஞ்சாட்டியும் வருகிறார்.. இதை திமுக விரும்பவில்லை..

ஆபத்து
திமுகவை எதிர்ப்பது அதிமுகவாக மட்டுமே இருக்க வேண்டும், திமுகவுக்கு மாற்று அதிமுகதான், தப்பித்தவறி பாஜகவாக இருந்துவிடக்கூடாது என்பதே எண்ணமாக இருக்கிறது. பாஜக போன்ற ஆபத்தான கட்சியை காட்டிலும், நேர் எதிரியான அதிமுகவே மேல் என்பதுதான் இதன் சாராம்சமாக உள்ளதாம்.. ஆக மொத்தம் அதிமுகவை சசிகலா கைப்பற்றினால் அதை, திமுக கண்டுகொள்ளாது என்றே சொல்கிறார்கள்... என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications