மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கு.. தமிழ்நாட்டில் மறுதேர்தல் நடக்குமா? இந்த கணிப்பு பலிச்சா அவ்ளோதான்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக வருகையால் திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத தொங்கு சட்டசபை ஏற்படும் சூழல் உள்ளதாக சில கணிப்புகள் கூறுகின்றன. தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளதா? அல்லது மறுதேர்தல் நடக்குமா? இப்போதைய அரசியல் சூழல் எப்படி இருக்கிறது?
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருக்கிறது.

எக்சிட் போல்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்தன. ஒன்றிரண்டு மட்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றன. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு, தவெக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் காமாக்யா நிறுவனம் வெளியிட்ட எக்சிட் போல் கருத்துக்கணிப்பு மட்டும் சற்று வித்தியாசமானதாக இருந்தது.
காமாக்யா எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி திமுக கூட்டணி 33% முதல் 35% வரையிலான வாக்குகளைப் பெற்று, 78 முதல் 95 வரையிலான தொகுதிகளைப் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 29% முதல் 33% வரையிலான வாக்குகளைப் பெற்று, 68 முதல் 84 வரையிலான தொகுதிகளைப் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கட்சிக்குமே பெரும்பான்மை இல்லை?
தவெக 25% முதல் 31% வரையிலான வாக்குகளைப் பெற்று, 67 முதல் 81 வரையிலான தொகுதிகளைப் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 4% முதல் 6% வரையிலான வாக்குகளைப் பெற்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்தத் தொகுதிகளில், எந்தவொரு தனிக்கட்சியோ அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டணியோ ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை (118 இடங்கள்) பெறாத நிலையே 'தொங்கு சட்டசபை' எனப்படும். இந்நிலை ஏற்படும்போது, வேறு கட்சிகளின் ஆதரவு மூலமே ஆட்சி அமையும் சூழல் ஏற்படும்.
தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு?
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது தொங்கு சட்டசபையாக மாறும். டெல்லியில் 2013ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி கணிசமான இடங்களை பிடித்ததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அப்படியான ஒரு நிலை இதுவரை வந்தது இல்லை.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1988 ஜனவரி 7 ஆம் தேதி தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக வி.என். ஜானகி ராமச்சந்திரன் பதவியேற்றார். ஆனால், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஜனவரி 28 அன்று சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கடும் கலவரம் வெடித்தது. ஜானகியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
அதிமுகவில்
இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, ஜன.30 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு ஜானகி ராமச்சந்திரனின் ஆட்சியை கலைத்ததால், வெறும் 23 நாட்களில் அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. அதிமுக இரண்டாக உடைந்த நிலையில் ஒரு அணியை ஜெயலலிதாவும், மற்றொரு அணியை ஜானகியும் வழிநடத்தினர். இதனால், 1989-ல் நடந்த தேர்தலில் இருவருமே பின்னடைவைச் சந்தித்தனர்.
அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்ட பிறகு ஜானகி தலைமையிலான அதிமுக (ஜா அணி) மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக (ஜெ அணி) என அழைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அதிமுகவின் "இரட்டை இலை" சின்னத்தை முடக்கியது. ஜானகி அணி 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் "இரட்டைப் புறா" சின்னத்தில் போட்டியிட்டு, இரண்டு இடங்களை மட்டுமே வென்றது. ஜெ அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்றது. பின்னர் கட்சியின் இரு பிரிவுகளும் ஒன்றிணைந்த பிறகு ஜானகி ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகினார்.
2026 சட்டசபை தேர்தலில்
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபைக்கான சூழல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, காமாக்யா நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, கட்சிகளுக்கு சீட்கள் கிடைத்தால், எந்தக் கட்சியும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளும், கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் வெற்று பெறக்கூடும்.
என்ன நடக்கும்?
அப்படியான சூழல் அமைந்தால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை கூட்டணி அமைக்க தவெக ஒப்புக்கொள்ளவில்லை எனில், வெளியில் இருந்து அதிமுகவிற்கு மைனாரிட்டி ஆதரவு அளிக்கவும் வாய்ப்புள்ளது. பெரும்பான்மை பலத்தோடு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க வரவில்லை எனில், தொங்கு சட்டசபை ஏற்படும்.
எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றால் தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். அதன் பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். விஜய் தலைமையிலான தவெகவின் வருகையால், தமிழகத்தில் முதல் முறையாக அப்படிப்பட்ட சூழல் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications