சீறிய செங்கோட்டையன்.. பாராட்டிய திமுக எம்எல்ஏக்கள்.. "நானே திராவிடன்தான்".. பாய்ந்து வந்த அண்ணாமலை!
சென்னை: திராவிட இயக்கம் தான் இந்த மண்ணை ஆளும் என்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், திராவிட இயக்கம் தான் இந்த மண்ணை ஆளும்.
வேறு எவராலும் இந்த மண்ணை ஆள முடியாது. திராவிட கட்சிகள் மட்டுமே இங்கு ஆட்சி செய்யும் என்று குறிப்பிட்டார். திமுக, அதிமுகவை குறிப்பிட்டு அவர் இப்படி பேசினார்.

செங்கோட்டையன்
தமிழ்நாட்டில் பாஜக தன்னை எதிர்க்கட்சியாக முன்னிறுத்தி வருகிறது. அதிமுகவின் இடத்தை எப்படியாவது பிடிக்கலாம் என்று பாஜக முயன்று வருகிறது. இந்த நிலையில்தான் திராவிட கட்சிகள் மட்டுமே இங்கு ஆட்சி செய்யும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். இதை சட்டசபையில் திமுகவினர் பெரிதும் வரவேற்றனர். அவரின் பேச்சுக்கு திமுகவினர் மேசையில் தட்டி வரவேற்பு கொடுத்தனர்.

திராவிடம்
இந்த நிலையில் செங்கோட்டையன் கருத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அதில், சட்டசபையில் பாஜக தேவையில்லாத விஷயத்தை பேசுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். நாங்களா தேவையில்லாத விஷயங்களை பேசுகிறோம். தேவையில்லாத விஷயங்களை பேசுவது, தேவையில்லாத வேலைகளை செய்வது முதல்வர் ஸ்டாலின்.

நீட் விஷயம்
நீட் விஷயத்தில் தேவையின்றி அவர் போராடி வருகிறார். அவர் இது தொடர்பாக பல மாநிலங்களுக்கு கடிதம் எழுதினார்.. எத்தனை பேர் அதற்கு பதில் அளித்தார்கள். அவர் கடந்த 10 மாதமாக செய்த ஆட்சி கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. அவர் எப்படி பாஜகவிற்கு பாடம் எடுக்கலாம். அவருக்கு எந்த தகுதியும் இல்லை.வரலாறு எதுவும் தெரியாமல் ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் சமூக நீதி பேசுவதாக நாடகம் ஆடுகிறார்கள்.

நானே திராவிடன்தான்
நாங்கள்தான் சமூக நீதி பேசும் கட்சி. திராவிட கட்சி என்பதை விளக்க வேண்டும். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக மட்டுமே பாஜக வேறு பட்ட கட்சி. நானே திராவிடன்தான். திராவிடர்கள்தான் இந்த மாநிலத்தை ஆள முடியும். எல்லோரும் எங்கள் உறவினர்கள்தான். திமுகவில் உள்ளவர்களும் எங்கள் உறவினர்கள்தான். அதிமுகவில் உள்ளவர்களும் எங்கள் உறவினர்கள்தான்.

வரலாறு அண்ணாமலை
திராவிட இயக்கம்தான் இந்த மாநிலத்தை ஆளும் என்று சொல்ல முடியும். தமிழ்நாட்டில் கண்டிப்பாக பாஜக வளர்ச்சி அடையும். 2026ல் தமிழ்நாட்டில் பாஜக 150க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும். தமிழ்நாட்டில் மதமாற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் கட்டாய மதமாற்றம் விவகாரம் மீண்டும் பெரிதாகி உள்ளது. தமிழ்நாடு அரசு இதை தடுக்க வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications