டெல்லியில் பழனிசாமி போன கார் யாருடையது என எனக்கு தெரியும்.. அண்ணாமலையும் நானும்! டிடிவி தினகரன் பரபர
சென்னை: டெல்லியில் பழனிசாமி போன கார் யாருடையது என எனக்கு தெரியும்.. பழனிசாமியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை.. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் அதிமுக இனி வெற்றியே பெறாது என்று டிடிவி தினகரன் கூறினார். அமமுகவை பொறுத்தவரை எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்றால் அந்த கூட்டணியில் இடம்பெறாது. அப்படி சென்றால் அது தற்கொலைக்கு சமம் எனவும், டிசம்பரில் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை பள்ளிக்கரணையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாஜகவின் பாதுகாப்பில்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தார். நாங்கள்தான் அவரை முதல்வர் ஆக்கினோம். மற்றவர்களை முதலமைச்சராக்க கூடிய இடத்தில் நான் இருந்தேன். எடப்பாடி முதலமைச்சராக ஏற்காமல் பல எம்.எல்.ஏக்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பாதுகாத்துத்தான் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கினோம்.
2011 ஆம் ஆண்டு அம்மா என்னை கட்சியில் இருந்து நீக்கியது உலகுக்கே தெரியும். ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் எனக்கு போட்டியிடும் எண்ணமே கிடையாது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த அந்த 10 ஆண்டுகளில் நான் யாருடனும் தொடர்பில் இல்லை.
தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எந்த வித பகையும் கிடையாது. நான் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறியது திட்டமிட்டு அல்ல. அண்ணாமலை என் நண்பர். அவரது எண்ணமும், என்னுடைய எண்ணமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என நயினார் நாகேந்திரன் கூறியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
நாளுக்கு ஒரு பேச்சு பேசுபவன் நான் அல்ல. என் பேச்சு எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். எடப்பாடி பழனிசாமி மாறிமாறி பேசக்கூடியவர். பழனிசாமியின் முகம் வாடியுள்ளது. காரில் வரும்போது ஏ.சி. போடவில்லையா? எதற்காக அவர் கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டிருக்கிறார்? அவர் வந்த கார் யாருடையது என்பது கூட எனக்கு தெரியும்.
பழனிசாமியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் அதிமுக இனி வெற்றியே பெறாது. அமமுகவை பொறுத்தவரை, எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்றால் அந்த கூட்டணியில் இடம்பெறாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லாது. அப்படி சென்றால் அது தற்கொலைக்கு சமம். வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது விரைவில் தெரியவரும். டிசம்பரில் மகிழ்ச்சியான செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications