தவெகவில் தான் இணைகிறார்.. செங்கோட்டையனை சந்தித்த பிறகு துக்ளக் ரமேஷ் சொன்ன தகவல்!
சென்னை: அதிமுக எம்எல்ஏ பதவியை இன்று செங்கோட்டையன் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து இன்று செங்கோட்டையனை, பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் சந்தித்து பேசினார். இதுபற்றி துக்ளக் ரமேஷ், ‛‛எனக்கும், செங்கோட்டையனுக்கும், கிட்டத்தட்ட 42 ஆண்டு காலம் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அவரை பற்றி கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி பேசுவதற்காக நான் இன்று அவரை சந்தித்தேன். உங்களை போல் நாளைய தினம் அவர் (செங்கோட்டையன்) தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் செங்கோட்டையன் மனதில் திமுக இல்லை. தவெக தான் உள்ளதை மறைமுகமாக துக்ளக் ரமேஷ் உறுதி செய்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகர் அப்பாபுவிடம் வழங்கினார். செங்கோட்டையன் நடிகர் விஜயின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த ராஜினாமா அதிக கவனம் பெற்றது.

மேலும் செங்கோட்டையன் தவெகவின் ஐக்கியமாகலாம் என்பதற்கான சான்ஸை இது அதிகரித்தது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக இன்று செங்கோட்டையன் அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து பேசினார். இது புதிய ட்விஸ்ட்டை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி செங்கோட்டையனின் சாய்ஸ் திமுகவாக இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பியது.
இதனால் செங்கோட்டையன் விஜயின் தவெக பக்கம் செல்கிறாரா? திமுக பக்கம் செல்கிறாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் செங்கோட்டையனை பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் இன்று சந்தித்து பேசினார். அதன்பிறகு துக்ளக் ரமேஷ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவர் செங்கோட்டையன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் நம்பிக்கையை பெற்று செயல்பட்டவர் செங்கோட்டையன். அவருடன் எனக்கு கிட்டத்தட்ட 42 ஆண்டு காலம் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அவரை பற்றி கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி பேசுவதற்காக நான் இன்று அவரை சந்தித்தேன். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் இருக்க கூடிய அவருடைய அரசியல் நலம் விரும்பிகள் அவர்(செங்கோட்டையன்) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும். விஜயின் கரத்தை வலுப்படுத்தி அவருடைய அரசியல் பயணம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று சிலரோடு பேசியதன் மூலமாக அறிந்து கொண்டேன்.
ஆகவே, உங்களை போல் நாளைய தினம் அவர் (செங்கோட்டையன்) தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே நான் பார்க்கிறேன். தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாக அந்த கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான கருவியாக இருப்பார் என்று நான் திடமாக நம்புகிறேன். அதுதவிர செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு அவருக்கு அளிக்ககூடிய முக்கியத்துவம், பொறுப்பு, கவுரவம் உள்ளிட்டவற்றை பார்த்து அதிமுகவில் அதிருப்தி மனநிலையில் உள்ளவர்கள் செங்கோட்டையன் முடிவை பின்தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நான் பார்க்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகம் என்பது திமுகவுக்கு போட்டியாக தேர்தல் களத்தில் உள்ளது. அதிமுகவுடன் சமவலிமையுடன் திகழ்ந்து அரசியல் சக்தியாக இருக்கிறது. சில இடங்களிலேயே அதிமுகவை விட தவெகவிற்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக எனக்கு தெரிந்த கருத்து கணிப்பு நடத்தும் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோல் சமீபகாலமாக விஜய், எம்ஜிஆரின் புகழை உச்சரிப்பதற்கு தொடங்கி உள்ளார். இதன்மூலம் அடிமட்டத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள், அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களின் பார்வையும் விஜய் பக்கம் திரும்பும். மேலும் சிலர் தவெகவில் இணையக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்று நான் நினைக்கிறேன்'' என்றார்.
இந்த வேளையில், பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ செங்கோட்டையனை நீங்கள் நேரடியாக பார்த்து பேசியபோது என்ன சொன்னார்?'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு துக்ளக் ரமேஷ், ‛‛அதிமுகவில் இருக்கக்கூடிய விரும்பதகாத சூழ்நிலை பற்றி என்னிடம் தெரிவித்தார்'' என்றார். இதையடுத்து பத்திரிகையாளர், ‛‛அதிமுக தொடங்கியபோதே செங்கோட்டையன் அந்த கட்சியில் பயணித்தார். இப்போது வேறு கட்சியில் சேர்வது என்பது நெருடலை ஏற்படுத்தாதா?'' என்ற வினாவை எழுப்பினார்.
அதற்கு துக்ளக் ரமேஷ், ‛‛அந்த நெருடல் என்பது நேர் எதிர் நிலையில் இருக்க கூடிய கட்சியில் போய் சேர்ந்தால் இருக்கும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் அதிமுக, திமுகவை எதிர்த்து பாதையை உருவாக்கி தொடங்கப்பட்ட இயக்கம். இதனால் அந்த இயக்கத்தில் (திமுக) சேர்வதென்றால் நெருடல் ஏற்படும். ஆனால் தவெக என்பது திமுகவை கூர்மையாக எதிர்க்க கூடிய இன்னொரு இயக்கம். அதில் இணைவதில் எந்த நெருடலும் இருக்காது. அதை தான் நான் குறிப்பிட்டேன். செங்கோட்டையனின் அனுபவத்தை தவெக சரியாக பயன்படுத்தி கொள்வது அந்த கட்சியின் எதிர்காலத்துக்கும், வளர்ச்சிக்கும் நல்லது என்று பார்க்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications