நான் முதல்வர் ஆனால்.. சர்கார் ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் விஜய் சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இதேபோல் கைவசம் இருக்கும் படத்தில் மட்டும் நடித்துவிட்டு இனி நடிக்க மாட்டேன் என்றும் விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில், முன்பு 'சர்கார்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில், விஜய் பேசிய முதல்வர் ஆனால் நடிக்க மாட்டேன் என்ற வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த 1992 ஆம் ஆண்டு நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமானார். இயக்குனர் மகனாக இருந்தாலும் சினிமாத்துறையில் கடும் போராட்டத்திற்கு பிறகே வெற்றி பெற்று உச்சத்துக்கு வந்தார். இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அப்போதே விஜயிடம் இருந்த அரசியல் ஆசை வெளிப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு என தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்ததானம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி என மக்கள் நலப் பணிகள் மூலம் மெல்ல அரசியலில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கினார்.
சர்கார் இசை வெளியீட்டு விழா: அதன்பிறகு நடிகர் விஜய் படத்துக்கு தொடர்ந்து சிக்கல் தொடர்ந்தன. தலைவா', 'கத்தி', 'மெர்சல்', 'சர்கார்' போன்ற படங்களும் வெளியாவதில் கடும் சவாலை சந்தித்தன. இதற்கான பதிலை அவ்வப்போது தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மறைமுகமாக கூறுவார். இதனால் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும்.
நடிக்க மாட்டேன்: அப்படி சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 'சர்கார்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில், "முதல்வர் ஆனால் என்ன செய்வீர்கள்?" என்று நடிகர் விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "முதல்வர் ஆனால், முதல்வராக நடிக்கமாட்டேன், உண்மையாக இருப்பேன்" என்று அதிரடியாக பதில் அளித்தார்.
நான் ரெடி தான் வரவா: விஜய் இப்படி பேசியதை தற்போது விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். தற்போது விஜய் அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்று அறிவித்து இருப்பதால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய் பேசியதை வைரலாக்கி வருகிறார்கள். அதை போல நான் ரெடிதான் வரவா என்ற பாடலையும் வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக இன்று நாள் முழுக்க அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயின் இந்த சர்பிரைஸ் அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications