ஜெ. மரண அறிக்கை.. பட்டாசு கடைகளில் ஜெ ராதாகிருஷ்ணன்.. மக்கள் என்ன செய்தனர் தெரியுமா?
சென்னை: சென்னையில் பட்டாசு கடைகளில் கூட்டுறவு துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எந்த துறையில் இருந்தாலும் அதில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் செய்பவர். சுனாமி வந்த போது ஜெ ராதாகிருஷ்ணன் நாகை, கடலூர் மாவட்டங்களில் செய்த செயல்கள் அளப்பறியது.
தமிழகத்தை கொரோனா தொற்றிக் கொண்ட போதும் இவர் இரவு பகல் பாராமல் விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூட்டம் உள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தி பம்பரமாக சுழன்றவர். நாகையில் சுனாமியின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்து வைத்து அவர்களுக்கான தேவைகளை இன்று வரை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பூர்த்தி செய்து வருகிறார்.

கூட்டுறவுத் துறை
இந்த நிலையில் இவர் திடீரென கூட்டுறவுத் துறை செயலாளராக மாற்றப்பட்டார். அங்கும் இவர் அதிரடிகளை காட்டினார். அவ்வப்போது ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்துவது, பொருட்கள் தரமாக இருக்கிறதா என பரிசோதிப்பது போன்ற செயல்களை செய்தார்.

ஜெயலலிதா மரணம்
இந்த நிலையில் தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் சிவக்குமார், ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகிய 4 பேர் குற்றம் செய்தவர்களாக அறிவிக்கப்பட்டது.

தலைமை செயலாளர் உத்தரவு
இவர்கள் மீது விசாரணை நடத்தவும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெ ராதாகிருஷ்ணனிடம் ஆணையம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

வெளிநாட்டுக்கு ஜெ அழைத்துசெல்லவில்லை
அதற்கு அவர் அது போல் வெளிநாட்டிற்கு அழைத்து சென்றால் இந்திய மருத்துவர்களை அவமதிக்கும் செயல் என்பதால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையில் நான் தெரிவிக்கவில்லை என கூறியிருந்தார். ஐஏஎஸ் அதிகாரியின் இந்த பதில் அதிரவைத்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.

கால்நடை மருத்துவர்
மேலும் கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணனை தகுதியின் பெயரில் மருத்துவர் என அழைப்பது உகந்தது அல்ல என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கூட்டுறவுத் துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் தேனாம்பேட்டையில் உள்ள பட்டாசுக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் மகிழ்ச்சி
அப்போது அவரை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க கைகுலுக்கி சார் ஹேப்பி தீபாவளி என்றனர். மேலும் குடும்பம் குடும்பமாக அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் அவர் கைகளால் பட்டாசு பெட்டிகளை வாங்கிச் சென்றனர். பொதுமக்களின் இந்த உற்சாக வரவேற்பால் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தார். அங்கு வந்த குழந்தைகளிடம் என்ன வகுப்பு என கேட்டதுடன் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Click it and Unblock the Notifications
