ரிசல்ட்டே மாறி இருக்கும்! 13 தொகுதிகளில் அதிமுக, பாஜக ஜெயித்திருக்கும்.. இது மட்டும் நடந்திருந்தால்!
சென்னை: அதிமுகவும் பாஜகவும் இந்த முறை தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் 13 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெற்றிருக்கலாம் என தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்திருக்குமா? வாங்க பார்க்கலாம்.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. எனினும், இந்த முறை தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், 40 தொகுதிகளிலுமே தோல்வியைச் சந்தித்துள்ளது. இதில் அதிமுக கூட்டணி 11 இடங்களிலும், பாஜக கூட்டணி 22 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளது.
அதிமுக - பாஜக சேர்ந்து போட்டியிட்டிருந்தால்: இந்நிலையில், அதிமுக - பாஜக கடந்த 2019 தேர்தலைப் போலவே இந்த முறையும் கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்தித்திருக்கும் பட்சத்தில் திமுக கூட்டணிக்கு கடுமையான நெருக்கடியினை உருவாக்கியிருக்க முடியும் என்றும், 13 லோக்சபா தொகுதிகளில் வென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
13 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கக்கூடும்: கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. அதிமுக - பாஜக கூட்டணி உடைந்ததை அடுத்து இரண்டு கட்சிகளும் இந்த தேர்தலில் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், அதிமுக - பாஜக இணைந்து இந்த தேர்தலைச் சந்தித்து இருந்தால் 13 தொகுதிகள் வரை வெற்றி பெற்று இருக்க முடியும் என தெரியவந்துள்ளது.
13 தொகுதிகளில் ரிசல்ட்டே மாறி இருக்கும்: குறிப்பாக, விருதுநகர், தென்காசி (தனி), சிதம்பரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆரணி உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியும். மேற்கண்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக பெற்ற வாக்குகளை சேர்த்தால் வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
13 தொகுதிகளில் அதிமுக, பாஜக மற்றும் பாமக பெற்ற வாக்குகள் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி கட்சியினரின் வாக்குகளை விட அதிகமாக உள்ளது. ஒருவேளை இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து இந்த தேர்தலைச் சந்தித்து இருந்தால் 13 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பினை உருவாக்கி இருக்கலாம்.
பாஜகவுக்கு மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலை இல்லாத சூழலால், தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருக்கும் பட்சத்தில் கூடுதலான தொகுதிகள் கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை பாஜக இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 தேர்தலில்: கடந்த 2019 லோக்சபா தேர்தலை திமுக, கிட்டத்தட்ட இன்று இருக்கும் அதே கூட்டணிக் கட்சிகளோடு தான் இணைந்து சந்தித்தது. அப்போது, 53.15 சதவீத வாக்குகளை திமுக - காங்கிரஸ் கூட்டணி அள்ளி இருந்தது. அதேசமயம், கடந்த முறை, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக நின்றிருந்த நிலையில் மொத்தமாக 30 சதவீத வாக்குகள் பெற்றன.
தற்போது, நான்கு முனைப் போட்டிக்கு மத்தியில் அதிமுக கூட்டணி சுமார் 23 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல பாஜக தனியாக 11.24 வாக்குகளையும் பாஜக கூட்டணி மொத்தமாக, சுமார் 18 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வாக்கு சதவீதம்:
தமிழ்நாட்டிஒ என்.டி.ஏ கூட்டணி ஓட்டுமொத்தமாக : 30.57%
அதிமுக - 19.39% (20 தொகுதிகளில் போட்டியிட்டு)
பாமக - 5.36% (7 தொகுதிகளில் போட்டியிட்டு)
பாஜக - 3.66% (5 தொகுதிகளில் போட்டியிட்டு)
தேமுதிக - 2.16% (4 தொகுதிகளில் போட்டியிட்டு)
2024 தேர்தலில் அதிமுக கூட்டணி வாக்கு சதவீதம்:
அதிமுக - 20.46% (34 தொகுதிகளில் போட்டியிட்டு)
தேமுதிக - 2.59% (5 தொகுதிகளில் போட்டியிட்டு)
2024 தேர்தலில் பாஜக கூட்டணி வாக்கு சதவீதம்:
பாஜக - 11.24% (23 தொகுதிகளில் போட்டியிட்டு)
பாமக - 4.1 % (10 தொகுதிகளில் போட்டியிட்டு)
பாஜக கூட்டணி மற்ற கட்சிகள் தோராயமாக - 3% வாக்குகள்
ஆக மொத்தம் அதிமுக பாஜக என கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் 41% வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடும். திமுகவுக்கு பல தொகுதிகளில் கடுமையான போட்டியை அளித்திருக்கக்கூடும். 13 இடங்களில் வெற்றியும் பெற்றிருக்ககூடும் என தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இது நடந்திருக்காது: அதேசமயம் இன்னொரு முக்கியமான பார்வையும் முன்வைக்கப்படுகிறது. பாஜக உடன் கூட்டணி அமைத்தால் அதிமுக சிறுபான்மை வாக்குகளை இழக்கிறது. அதேபோல, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பாஜக, மென் இந்துத்வா வாக்குகளை இழக்கிறது. இரு கட்சிகளும் தனித்தனியாக நிற்கும்போது தான் தங்கள் வாக்குகளை முழுமையாக பெற முடிகிறது.
எனவே, தற்போது, இரு கட்சிகளும் தனித் தனியாக வாங்கியுள்ள வாக்குகளை வைத்து, கூட்டணி அமைத்திருந்தால் 13 இடங்களில் வென்றிருப்பார்கள் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள், அப்படி கூட்டணி அமைத்திருந்தாலும், இதே ரிசல்ட்டே கூட ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications