திமுக ஜெயிச்சா.. ராஜினாமா செய்யுறேன்! மதுராந்தகத்தில் சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த தொகுதியில் தவெகவை விட திமுக வேட்பாளர் ஒரு வாக்கு அதிகமாக வாங்கினாலும் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள், நாதக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மதுராந்தகத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "திமுகவை யாராலும் அழிக்க முடியாது என கனிமொழி கூறுவார். ஆனால், இப்போது ஒருவர் இருக்கிறார்.. திமுகவை அழிக்க வந்தவர். அவர்தான் உதயநிதி ஸ்டாலின். 1967ல் அண்ணா மக்கள் ஆட்சியை கொண்டு வந்தார். அதன் பிறகு கலைஞர் கருணாநிதி குடும்ப ஆட்சியை கொண்டு வந்தார். பின்னர் வந்த மு.க.ஸ்டாலினுக்கு தன் மகனை பெரிய மன்னனாக்க வேண்டும் என்று கனவு உள்ளது.
நல்ல மன்னன் போருக்கு சென்று மக்களை பாதுகாப்பார். இன்னும் சில மன்னர்கள் அந்தப்புரத்தில் மட்டுமே இருப்பார்கள். தேர்தல் என்றால் என்ன? அது ஒரு யுத்தம். அந்த யுத்தத்திற்குள் திடீரென வந்த இளவரசருக்கு அந்தபுரத்தில் கற்றுக்கொண்ட ஆபாசம்தான் வாயில் வரம். மன்னராட்சியை ஒழிப்பதற்கு ஒரு மக்கள் தலைவர் வந்துள்ளார். அதுதான் முதல்வர் விஜய்.
இளவரசர் உதயநிதி எங்கள் தலைவர் அளவுக்கு பேச வேண்டாம். எங்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றிப் பெற்றுவிட்டால் தவெக பொதுச்செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். உதயநிதிக்கு நான் வெளிப்படையாக சவால் விடுகிறேன்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு உங்கள் அப்பாவை கூட கூட்டிக்கொண்டு வாங்க. திமுக தோற்றுவிட்டால் கட்சிப் பதவியிலிருந்து விலக உதயநிதி தயாரா? நாங்கள் எளிய வீட்டுப் பிள்ளைகள். நீங்கள் 70 ஆண்டு பழமையான கட்சி ஆச்சே! மதுராந்தகத்தில் தவெகவை விட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கி காட்டுங்கள்" என்று சவால் விட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
