இந்தியாவில் இருந்து 10 ரூபாயோடு போனால் 2 லட்சமாகும் மதிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?
சென்னை: நம் நாட்டில் உள்ள பணம் 10 ரூபாய்க்கு 2 லட்சம் மதிப்பு கொண்ட நாடாக ஈரான் உள்ளது. ஈரானுக்கு சென்று நீங்கள் 10 ரூபாய் கொடுத்தால் அந்த நாட்டின் பணம் 2 லட்சம் ரியால் கிடைக்கும்.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நாடாக ஈரான் உள்ளது. இதனால், அந்த நாட்டு பணத்தின் மதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதாவது ஈரான் நாட்டில் தற்போது பணவீக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.

ஒரு ரூபாய்க்கு 20 ஆயிரம் மதிப்பு
போதாக்குறைக்கு அமெரிக்கா தாக்குதலையும் தொடங்கியிருப்பதால் ஈரானின் பண மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஈரான் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஈரானின் பணம் ரியால் என்று அழைக்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்புடன் ஈரான் ரியாலை மதிப்பிட்டால் ஒரு நிமிடம் தலையே சுற்றி விடும் அளவுக்கு உள்ளது.
இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு ஈடான ஈரானின் பண மதிப்பு 20,369.38- ரியாலாக உள்ளது. எதுவும் டைப்பிங் மிஸ்டேக்காக இருக்குமோ என நினைக்க வேண்டாம். உண்மையில் ஈரான் பண மதிப்பு இந்திய ரூபாயுடன் ஒப்பிடும் போது அந்த அளவு வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
தண்ணீர் பாட்டில் விலை ரூ.60,000
அதாவது இந்தியாவில் இருந்து நீங்கள் 100 ரூபாய் எடுத்து சென்று ஈரான் ரியாலுக்கு மாற்றினால் அந்த ஊர் பணத்தில் 20,36,937- ரியால் கிடைக்கும். அடேங்கப்பா அப்போ இப்பவே விமானமோ கப்பலோ பிடித்து ஈரான் பக்கம் போய் விட வேண்டியதுதான் என்று கூட சிலருக்கு நினைக்க தோன்றும். ஆனால் பண மதிப்பு இவ்வளவு கூடுதலாக இருப்பது போலவே, ஈரான் ரியாலுக்கு அங்கு மதிப்பே கிடையாது.
உதாரணத்திற்கு சாதாரண தண்ணீர் பாட்டிலின் விலையே 60,000 முதல் 80,000 ஆயிரம் வரை இருக்கும். கூட்டி கழித்து பார்த்தால் நமது ஊர் பணத்திற்கு சற்றேறக்குறைய ரூ.5 என்ற அளவில் இருக்கும்.
டாலர் மதிப்பு எவ்வளவு இருக்கும்?
இந்திய ரூபாய்க்கே இவ்வளவு மதிப்பு என்றால் அமெரிக்காவின் டாலர் என்னவாக இருக்கும் என்று நினைக்கலாம். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்புக்கு ஈடாக ஈரானில் 19,13,738 ரியால் உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஈரானின் ரியால் மதிப்புதான் உலகிலேயே மதிப்பு குறைவாக உள்ள நாணயங்களில் ஒன்றாக உள்ளது.
ஈரானில் கடுமையான பணவீக்கம், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால அந்தநாட்டில் மக்கள் கடும் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். அன்றாட அடிப்படை தேவைகளுக்கு கூட திண்டாடும் நிலையே இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாமலும், கடனை அடைக்கவும் சிலர் உடல் உறுப்புகளை கூட விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்கு காரணம்
ஈரானில் கடந்த பல ஆண்டுகளாக பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது மேற்காசிய போரும் அந்த நாட்டிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. 8 மாதங்களை கடந்து போர் தொடர்ந்து நீடித்து வருவதால் அந்த நாட்டில் முதலீடுகளும் வர்த்தகமும் அடியோடு முடங்கியுள்ளது.
அதிகரித்து வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மை, உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை காரணமாக அந்நாட்டிலிருந்து பெருமளவில் முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதனால் அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களாலே அந்த நாட்டில் பண மதிப்பு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.





Click it and Unblock the Notifications
