‘‘சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு''.. விஜய் போட்டோவுடன் இளையராஜா பகிர்ந்த பாடல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் யார் வென்று அடுத்த முதல்வர் யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'ஆக்சிஸ் மை இந்தியா' கருத்து கணிப்பில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 தொகுதிகள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா விஜய்யின் போட்டோவுடன் ''சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு'' என்ற பாடலை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து இருப்பது கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 23ம் தேதி நடந்து முடிந்தது. மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கிறது? அடுத்த முதல்வர் யார்? என்பது வரும் திங்கட்கிழமை தெரிந்துவிடும்.

இந்நிலையில் தான் இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் விஜய்யின் போட்டோவுடன் பாடல் ஒன்றை பகிர்ந்து இருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது.
இளையராஜா பகிர்ந்த பாடல்
இளையராஜா சொந்தமாக Ilaiyaraajaofficial என்ற யூடியூப் சேனலை வைத்துள்ளார். இந்த சேனலில் இளையராஜா தனது இசையமைப்பில் வெளியான படங்களின் பாடல்களை ஆடியோவாக வெளியிட்டு வருகிறார். தினமும் 2 பாடல்கள் இந்த சேனலில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று இளையராஜா, ''இது எங்கள் நீதி' என்ற திரைப்படத்தில் இருந்து 2 பாடல்களைபகிர்ந்து இருந்தார்.
இந்த படத்தில் நிழல்கள் ரவி, ராதிகா, ராதாரவி, ராம்கி உள்பட பலர் நடித்துள்ளார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த 1988 ம் ஆண்டு வெளியான இந்த படத்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள , ''சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு'' என்ற பாடலை தான் தற்போது இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கவனம் பெற்ற பாடல் வரிகள்
இந்தபாடல், ''சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு
நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்
எந்த நாளும் வாடாத ரோஜாக்கள்
நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம்
ஜாதியும் பேதமும் இல்லையே..'' என அமைந்துள்ளது.
இந்த படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நிலையில் ஹீரோயின் ராதிகாவுடன், அவர் சேர்ந்து இருப்பது போன்ற போட்டோவுடன் இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
ஹோம் இமேஜில் உள்ள காட்சி
அதோடு பாடல் வரிகள் மட்டுமின்றி படத்தின் பெயருக்கு அப்பாற்பட்டு, அந்த பாடலின் ஹோம் இமேஜின் பின்புறத்தை உற்று கவனித்தால் அரசியலை எதிரொலிக்கும் காட்சிகள் தென்படுகிறது. பெரிய மாளிகையின் முன்பு கட்சி கொடியை உயர்த்தி தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிப்பது போலவும், வெற்றியின் அடையாளமாக கையை உயர்த்தி காட்டுவது போன்ற போட்டோவும் பின்னணியில் தெரிகிறது. இதனால் இளையராஜாவின் இந்த செயல் தற்போது பேசும்பொருளாகி உள்ளது.

தமிழக மக்கள் வாக்களித்துவிட்டு தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த வேளையில் இளையராஜா விஜய் போட்டோவுடன் ''சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு'' என்ற பாடலை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் வென்று ஆட்சியை கைப்பற்றுவார் என்று இளையராஜா நம்புகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
களநிலவரம் என்ன?
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் கணிசமான வாக்கு சதவீதத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 'எக்ஸிட் போல்' எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நடத்தி 11 நிறுவனங்களை முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதில் 7 திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், 3 அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ரிசல்ட்டை வெளியிட்டுள்ளன.
அதேவேளையில், 'ஆக்சிஸ் மை இந்தியா' என்ற கருத்து கணிப்பு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாகவும் ரிசல்டை வெளியிட்டுள்ளன. 'ஆக்சிஸ் மை இந்தியா' கருத்து கணிப்பில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீத வாக்குகளை பெற்று 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணித்து இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications