சென்னை வியாசர்பாடியில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.. கள்ளத்தொடர்பை தட்டிகேட்டவருக்கு விபரீதம்
சென்னை: சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக 19 வயது இளைஞர் ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி நாளான நேற்று இரவு ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 62-வது பிளாக் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (19), ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தனுஷின் அண்ணன் சிலம்பரசன், சத்தியமூர்த்தி நகர் 58-வது பிளாக் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டி என்பவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிலம்பரசனை வழிமறித்து, ஏன் இந்தப் பகுதியில் வருகிறாய் எனக் கேட்டு அவரைத் தாக்கியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிலம்பரசன், நடந்த சம்பவம் குறித்து தனது தம்பி தனுஷிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், சம்பவ இடத்திற்குச் சென்று அப்புகுட்டியிடம் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது அங்கு இருந்த அப்புகுட்டி, அவரது தந்தை பொய்யாது மற்றும் அவர்களுடன் வந்த மேலும் நான்கு பேர் என மொத்தம் ஆறு பேர் சேர்ந்து தனுஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தனுஷை ஆட்டோ மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் முன்விரோதம்?
இந்தக் கொலை தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த தனுஷின் சித்திக்கும் பொய்யாது என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், இதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து பொய்யாதுவிடம் ஏற்கனவே தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தனுஷுக்கும் பொய்யாது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பொய்யாது, அவரது மகன் அப்புகுட்டி உள்ளிட்ட ஆறு பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்க எம்.கே.பி. நகர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
