பாலின் தரத்தை பரிசோதிக்கும் புதிய முறை.. உடனே அமல்படுத்துக.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை வெளிப்படையாக மாவட்ட அளவில் பரிசோதிக்கும் புதிய நடைமுறையை விரைந்து அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தினந்தோறும் பாலின் தரம், அளவு அடிப்படையில் பாலுக்கான கட்டணம் வழங்கப்பட்டு வந்தது.

பால் கொண்டு செல்வதில் முறைகேடுகள் நடப்பதால் அவற்றை தடுக்கவும், தரத்தை பரிசோதிக்கவும் வெளிப்படையான நடைமுறையை பரிந்துரைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரையின் படி, பாலை தரச் சோதனை மேற்கொண்டு, பால் உற்பத்தியாளருக்கு மின்னணு முறையில் தகவல் வழங்கி, உரிய தொகை வழங்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படும் என பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை ஆணையர் கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தார்.
இந்த புதிய நடைமுறை கடந்த ஆறு ஆண்டுகளாக அமல்படுத்தப்படாததால், மாவட்ட அளவில் பாலின் தரம் பரிசோதிக்கப்பட்டு, விலை வழங்கப்படும் என பால் வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே தினந்தோறும் பாலின் தரத்தை சோதனை செய்து அதனை அடிப்படையாக கொண்டு விலையை வழங்க உத்தரவிடக் கோரி கடந்த 2016-ம் ஆண்டில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட அளவில் பால் தரம் பரிசோதிக்கப்பட்டு விலை வழங்கப்படும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கானது, இறுதி விசாரணைக்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பால் உற்பத்தி ம்ற்றும் பால் வளத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் 6 ஆண்டுகளாக அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை வெளிப்படையாக மாவட்ட அளவில் பரிசோதிக்கும் புதிய நடைமுறையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications