திமுக உட்கட்சித் தேர்தல்! இளைஞரணி நிர்வாகிகளுக்கு கிடைக்கும் புரோமோஷன்கள்! பின்னணி என்ன?
சென்னை: திமுக உட்கட்சித் தேர்தல் மூலம் இளைஞரணி நிர்வாகிகள் பலர் முக்கியப் பதவிகளுக்கு புரோமோஷன் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
உதாரணத்துக்கு கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த நவநீதகிருஷ்ணன் பொள்ளாச்சி நகரச் செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் இவரைப் போலவே இன்னும் பல இளைஞரணி நிர்வாகிகள் கட்சியில் அடுத்தக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளனர்.

திமுக உட்கட்சித் தேர்தல்
அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் திமுகவில் நகரச் செயலாளர் பதவிக்கான உட்கட்சித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இளைஞரணி நிர்வாகிகளாக இருந்த பலருக்கு கட்சியில் பதவி உயர்வு கிடைத்திருப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது. கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி நகரச் செயலாளர் பதவிக்கு தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் 23 பேர் கச்சை கட்டி நின்று போட்டி போட்டனர்.

நகரச் செயலாளர்
இது மேலிட தேர்தல் பார்வையாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வையே அதிர வைத்தது. இப்படி கடும் போட்டி நிலவிய பொள்ளாச்சியில் இளைஞரணி அமைப்பாளராக இருந்த நவநீதகிருஷ்ணன் தான் வெற்றிபெற்று பொள்ளாச்சி நகரச் செயலாளர் ஆகியிருக்கிறார். இவரை போல் இன்னும் பல நகர, பேரூர், மற்றும் ஒன்றியங்களுக்கு இளைஞரணி நிர்வாகிகள் புதிய பொறுப்பாளர்களாக தேர்வாகி இருக்கிறார்கள். இதனிடையே இளைஞரணி நிர்வாகிகள் சரியாக உழைத்தால் கட்சியில் புரோமோஷன் உண்டு என்பதை உணர்த்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

புதிய உத்வேகம்
இளைஞரணி நிர்வாகிகளாக இருந்த நாமக்கல் ராஜேஷ்குமார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்ளிட்ட பலருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கி, மற்ற இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இப்போது அதேபோல் ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் பதவியிடங்களில் தகுதியும் திறமையும் உள்ள இளைஞரணி நிர்வாகிகளை கொண்டு வந்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
Recommended Video

பதவி பஞ்சாயத்து
திமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான பஞ்சாயத்துக்களை ஆ.ராசா, கே.என்.நேரு, அன்பகம் கலை ஆகியோர் அவ்வப்போது விசாரித்து உடனுக்குடன் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு வழங்கி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications