1956ல் அம்பாசடர் கார் விலை ஜஸ்ட் ரூ.9,845 தான்! காலத்தால் அழியாத கம்பீர மோட்டார் யானை!
சென்னை: இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான அம்பாசடர் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்ற போதும் இன்னும் சாலைகளில் ராஜாவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
அம்பாசடர் காரை பார்த்தாலே ''பிளஷர் வருது'' என கிராமப்புறங்களில் ஒரு காலத்தில் பெரிதாக பேசப்பட்டதுண்டு. லேண்ட்மாஸ்டர், மார்க் 1, மார்க் 2, மார்க் 3, மெட்டடோர், டிரக்கர், ஹெச்.எம். ப்ளஸ், இஷ்யூஷூ, இஷ்யூஷூ கிராண்ட் என காலத்திற்கேற்ப அம்பாசடர் காரில் மாடல்களும், இஞ்சின்களும் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால் அதன் உறுதிமிக்க கம்பீரமான தோற்றத்தில் மட்டும் மாற்றமில்லை.

அம்பாசடர் காரில் அமர்ந்து பயணிப்பதே அலாதி சுகமாக இருக்கும். எத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்தாலும் உடல் வலி வராது, பயண அலுப்பு ஏற்படாது, தலை சுற்றாது, எல்லாவற்றுக்கும் மேலாக அவ்வளவு எளிதில் விபத்தில் சிக்காது. அந்தளவுக்கு உறுதிவாய்ந்த கார் அம்பாசடர். அதேபோல் அடிக்கடி பழுதும் ஏற்படாது, அப்படியே பழுது வந்தாலும் சொற்பமான செலவில் அதனை சரிசெய்துவிட முடியும். ஷோரூம்களில் காரை கொடுத்து மலைக்க வைக்கும் தொகையை கப்பம் கட்டத் தேவையில்லை.
பிரதமரில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர், தாசில்தார்கள் வரை ஒரு காலத்தில் அம்பாசடர் காரை தான் பயன்படுத்தினார்கள். அதேபோல் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அம்பாசடர் கார்கள் தான் வழங்கப்பட்டன. இப்படி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் என்கிற ரீதியில், கம்பீர மோட்டார் யானையாக சாலைகளில் வலம் வந்த அம்பாசடர் கார் உற்பத்தியை கடந்த 2014ஆம் ஆண்டுடன் நிறுத்திக்கொண்டது இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம்.
ஆனாலும் தமிழ்நாட்டில் இன்றும் பலர் பல லட்சங்களை செலவு செய்து அம்பாசடர் காரை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் அம்பாசடர் கார் ஒருவேளை மீண்டும் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தால் அதன் எக்ஸ் ஷோரூம் விலை குறைந்தது 10 லட்சத்துக்கு மேலாவது இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1956ஆம் ஆண்டு அம்பாசடர் லேண்ட்மாஸ்டர் மாடல் கார் விலை பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவு தான் என்றால் நம்பமுடிகிறதா.
ஆமால் அன்றைய காலக்கட்டத்தில் அம்பாசடர் காரின் எக்ஸ் ஷோரூம் விலையே ரூ.9,845 தான் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழலில் 10,000 ரூபாய் என்பது லட்சங்களில் ஈடுகட்டக் கூடிய அளவுக்கு பெரிய தொகை என்பதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications