திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்புமணியின் பாமகவிற்கு 17 தொகுதிகளுக்கும், டிடிவி தினகரனின் அமமுகவிற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் அதிமுக - பாஜக இடையேயான தொகுதி பங்கீட்டில் இதுவரை நடக்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக தலைமையிலான கூட்டணியில் நேற்று முக்கிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிவடைந்தது.

அதன்படி கூட்டணியில் உள்ள அன்புமணியின் பாமகவிற்கு 17 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியல் பாமகவிற்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் 6 சீட் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
பாஜகவுக்கு 27 தொகுதிகள்
அதேசமயம், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டன. இதில் 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வென்றனர். ஆனால் தற்போது 7 சட்டசபை தொகுதிகள் கூடுதலாக எடப்பாடி பழனிச்சாமி வழங்கி உள்ளார். இதன்மூலம் பாஜக களமிறங்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுகவின் முதன்மை பார்ட்னராக...
இந்நிலையில் தான் பாஜக தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு அடிப்படையில் பாஜக முதன்மை கூட்டணி கட்சியாக மாறி உள்ளது. ஏனென்றால் அந்த கூட்டணியில் அதிமுகவுக்கு பிறகு அடுத்த இடத்தில் பாஜக தான் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாமகவின் பெயரை பறித்த பாஜக
கடந்த 2021 சட்டசபை தேர்தல் கூட்டணியில் பாமகவிற்கு 23 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டதன் மூலம் அந்த கட்சி அதிமுகவின் முதன்மை கூட்டணியாக இருந்தது. தற்போது பாமகவின் அந்த பெயரை பாஜக தட்டிப்பறித்துள்ளது.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் பாஜக இதுவரை திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச சட்டசபை தொகுதி இந்த முறை தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவை ஓவர்டேக் செய்த எடப்பாடி
முன்னதாக கடந்த 2001 சட்டசபை தேர்தலில் திமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்து இருந்தது. அப்போது பாஜகவுக்கு 21 தொகுதிகள் வழங்கப்பட்டது. தமிழகத்தை ஆண்ட ஒரு கட்சி பாஜகவுக்கு வழங்கிய அதிகபட்ச தொகுதி இதுதான். இதில் 4 பேர் வெற்றி பெற்றனர். அதன்பிறகு 2001ல் திமுக வழங்கியதை விட ஒன்று குறைத்து 2021ல் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது 27 தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார். இதனால் அதிமுகவின் முதன்மை கூட்டணி கட்சியாக பாஜக அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனது தலைமையில் கூட்டணி அமைத்து 18 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கியது தான்.
எடப்பாடியை புகழும் அதிமுகவினர்
அதே சமயம் தமிழகத்தில் காங்கிரஸை விட பாஜக வளர்ந்து கொண்டே வருகிறது. இருப்பினும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதி + ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மத்தியில் ஆளும் பாஜகவை 27 சட்டசபை தொகுதிகளிலேயே முடக்கி உள்ளார். இது அவரது ஆளுமையை காட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில் தமிழகத்தில் பாஜக இதற்கு முன்பு பல தேர்தல்களில் தனித்தும், திமுக - அதிமுக அல்லாமல் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டுள்ளது. அப்போது 200+ தொகுதிகளிலும் களமிறங்கி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications