‛‛பாஜக நஹி’’.. தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர் இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டு சதவீதம் பதிவாகி உள்ள டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியில் இல்லாததும், அங்கு திமுக, அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் தான் களத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. அதன்பிறகு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டது. வரும் ஜுன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் அறையில் இருந்து வெளியே எடுக்கப்படும்.

முன்னதாக தமிழகத்தில் பதிவான ஓட்டு சதவீதத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பொதுவாக தேர்தல் நடக்கும் நாளில் இரவில் தேர்தல் அதிகாரி சார்பில் தொகுதி வாரியாகவும், தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதத்தையும் அறிவிப்பார். அதன்பிறகு தேர்தலுக்கு மறுநாள் இறுதியாக வாக்கு சதவீதம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படும்.
இந்த நடைமுறையை பொறுத்தமட்டில் தேர்தல் நாளில் கூறப்படும் வாக்கு சதவீதத்தை விட மறுநாள் கூறப்படும் வாக்கு சதவீதம் என்பது சற்று உயர்ந்து தான் இருக்கும். பெரும்பாலான தேர்தல்களில் இதுதான் நடக்கும். ஆனால் தமிழகத்தில் இந்த முறை தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. அதாவது தேர்தல் நாளில் தமிழகத்தில் மொத்தம் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு தேர்தல் நாள் நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. ஓட்டு சதவீதம் சுமார் 3 சதவீதம் வரை குறைந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு மறுநாள் தேர்தல் ஆணையம் சார்பில் தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகள், தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் இறுதியாக வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 2வது முறை கூறிய வாக்கு சதவீதத்தை விட இது 0.15 சதவீதம் அதிகமாகும். இதுதான் 2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பதிவான ஓட்டு சதவீதமாகும்.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. குறைந்தபட்சம் என்றால் மத்திய சென்னையில் 53.96 சதவீத ஓட்டு பதிவாகி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் சராசரியாக பதிவாகி உள்ள 69.46 சதவீதத்தை விட சில தொகுதிகளில் அதிகளவில் வாக்குகள் பதிவாகி உள்ளது.
இதில் டாப் 10 இடத்தில் உள்ள தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் களத்தில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மாறாக பாஜகவின் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தான் போட்டியில் உள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக கள்ளக்குறிச்சியில் 79.21 சதவீதம், நாமக்கல்லில் 78.21 சதவீதம், பெரம்பலூரில் 77.43 சதவீதம், ஆரணியில் 75.76 சதவீதம், வேலூரில் 74.24 சதவீதம், அரக்கோணத்தில் 74.19 , காஞ்சிபுரத்தில் 71.68 சதவீதம், கிருஷ்ணகிரியில் 71.5 சதவீதம், தேனியில் 69.84 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இதில் 2 தொகுதிகளை தவிர மீதமுள்ள 8 தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் போட்டியிட்டுள்ளனர்.
இதில் முதலிடத்தில் உள்ள தர்மபுரியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிட்டுள்ளார். 2வது இடத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் பாமகவின் தேவதாஸ், 3வது இடத்தில் உள்ள நாமக்கல்லில் பாஜகவின் கேபி ராமலிங்கம், 4வது இடத்தில் உள்ள பெரம்பலூரில் சிட்டிங் எம்பியான பாஜக கூட்டணியின் ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். ஆரணியில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக கணேஷ் குமார் போட்டியிட்டுள்ளார்.
6வது இடத்தில் உள்ள வேலூரில் பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் களமிறங்கி உள்ளார். 7 வது இடத்தில் உள்ள அரக்கோணத்தில் பாமக வேட்பாளர் பாலு, 8 வது இடத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் பாமகவின் ஜோதி, 9வது இடத்தில் உள்ள கிருஷ்ணகிரியில் பாஜகவின் நரசிம்மன், 10வது இடத்தில் உள்ள தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்டுள்ளனர். அதாவது இந்த 10 இடங்களில் உள்ள நாமக்கல்லில் பாஜகவின் கேபி ராமலிங்கம், கிருஷ்ணகிரியில் பாஜகவின் நரசிம்மன் மட்டுமே பாஜக வேட்பாளர்கள். மற்ற 8 இடங்களில் பாஜக கூட்டணி கட்சியினர் தான் போட்டியிட்டுள்ளனர்.
மேலும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் 10 தொகுதிகளில் 6 இடங்களில் தமிழகத்தின் மொத்த வாக்கு பதிவை விட குறைவாக பதிவாகி உள்ளது. இதில் வடசென்னை, தென்சென்னை தொகுதிகளும் அடங்கும். மேலும் திமுக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதில் 9 தொகுதிகளில் 5 இடங்களில் தமிழகத்தின மொத்த வாக்கு சதவீதத்தை விட அதிகளவில் ஓட்டுப்பதிவாகி உள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக போட்டியிட்ட 5 இடங்களில் 2 தொகுதிகளில் தமிழகத்தில் மொத்த ஓட்டு சதவீதத்தை விட குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications