சிரிப்பு கைப்புள்ள இல்ல.. இவர் சீரியஸ் கைப்புள்ளை! தேர்தலில் போட்டியிடும் மக்களை மிரட்டும் ரவுடி
விழுப்புரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் சூழலில், விக்கிரவாண்டி பேரூராட்சியில் ஒரு வார்டில் மட்டும் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பலமுனை போட்டி நிலவுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யும் கடைசி நாள் இன்றுடன் நிறைவடைந்தது.

ஒரு வார்டு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டுகளுக்கும் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், ஒரு வார்டில் மட்டும் யாருமே வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. மற்ற 14 வார்டுகளிலும் திமுக, அதிமுக, சுயேச்சைகள் எனப் பலரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும், 7வது வார்ட்டிற்கு மட்டும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை,

ரவுடி மிரட்டல்
விக்கிரவாண்டி வானியர் தெருவில் 34 வயதான ரவுடி கைப்புள்ள என்கிற வரதராஜ் வசித்து வருகிறார். இவரது மிரட்டலுக்கு அஞ்சி இன்று மதியம் வரை 7வது வார்டில் யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. சுயேச்சை மட்டுமின்றி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டோரும் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

என்ன காரணம்
விழுப்புரம், திண்டிவனம் உட்பட பல காவல் நிலையங்களில் ரவடி வரதராஜ் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 19 வழக்குகள் ஏற்கனவே உள்ளது. ரவடி வரதராஜ் ஏற்கனவே இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் கைதானவர். இவர் 7ஆவது வார்டில் தனது மனைவி சிவகாமியை போட்டியிட வைக்க இருப்பதால், மற்றவர்கள் போட்டியிடக்கூடாது என்று மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே யாரும் திமுக, அதிமுக உட்பட முக்கிய வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.

தலைமறைவு
வரதராஜின் மனைவி சிவகாமி மீது ஏற்கனவே சாராயம் விற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது அவரை கைது செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல அவரது மாமியார் உஷா, சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். வரதராஜ் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாக உள்ள நிலையில், இன்று மதியம் வரையிலும் கூட விக்கிரவாண்டி பேரூடாச்யில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை












Click it and Unblock the Notifications