இன்பதுரை சொன்ன துக்ளக் தர்பார்.. பட்டினப்பாக்கம் தலைமை செயலகமா? "மண் கோட்டை" சொல்ல காரணங்கள் இவைதானா
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மீனவர்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் முடிவுக்கு அதிமுக எம்பி இன்பதுரையும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் முதலில் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுக்கப்போவது போக்குவரத்து நெரிசல்தான் என கூறப்படுகிறது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்
ஏற்கனவே சாந்தோம் சாலை, பசுமைவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனுடன் சாந்தோம் தேவாலயம், பள்ளிகள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களும் அப்பகுதியில் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைந்தால், தினசரி ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் சூழல் உருவாகும் என்பதால் நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்ல, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்களுக்காக அடையாளம் காணப்பட்டுள்ள 26.36 ஏக்கர் நிலம் போதுமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாடிக் கட்டிடம் அமைக்கப்பட்டாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி காலி இடம், பசுமைப் பரப்பு, வாகன நிறுத்தம் உள்ளிட்டவற்றுக்கு இடம் ஒதுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி தீயணைப்பு நிலையம், அவசர மருத்துவ வசதி, உணவகம், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் இடம் தேவைப்படும். இதனால் இப்போதுள்ள தலைமைச் செயலகத்தைப் போலவே எதிர்காலத்தில் புதிய வளாகத்திலும் இடநெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சென்னை மீனவர்களும் கோபம்
இதனிடையே, பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி 9 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், கடற்கரையை ஒட்டியுள்ள தங்களது பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர் பகுதிகள் பள்ளி மண்டலமாக இருப்பதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான மீனவ அமைப்புகள் வரும் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளன. புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பதுரை சொன்ன துக்ளக் தர்பார் ரகம்
முதல்வரின் அலுவலகம் கடலைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என்பதற்காக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது நியாயமா என்றும், நிதிப் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படும் நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட மட்டும் எவ்வாறு நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் மீனவ அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்தத் திட்டத்தை அதிமுக எம்பி இன்பதுரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் நிறைந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தவெக அரசின் முடிவு, "அக்மார்க் துக்ளக் தர்பார் ரகம்" என்று கடுமையாகவே சாடியுள்ளார்.
மண் கோட்டை
புதிய கட்டுமானத்துக்கு CRZ, Prior EC விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா? என்றும், அடையாறு முகத்துவாரம் மற்றும் வெள்ளநீர் வடிகால் பாதிக்கப்படாதா? என்று கேள்வி எழுப்பியுள்ள இன்பதுரை, இந்த முக்கியமான அம்சங்களை முறையாக பரிசீலிக்காமல் பட்டினப்பாக்கத்தில் தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்ட முயல்வதாகவும், இத்தகைய திட்டம் "சட்டத்தின் முன் நிற்காத மண் கோட்டை" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தற்போது அரசியல் ரீதியாகவும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது, பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது...!!


Click it and Unblock the Notifications
