"பொங்கல் வாழ்த்துகள்.. எனக்கு புத்தாண்டு சித்திரையில் தான்.." சலசலப்பை கிளப்பிய கார்த்தி சிதம்பரம்
சென்னை: பொங்கல் வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், தமிழ்ப் புத்தாண்டு சித்தரை தான் எனக் குறிப்பிட்டுள்ளதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்,
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவராலும் தை முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளுக்காக பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அப்படி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பொங்கல் வாழ்த்து குறித்துப் பதிவிட்ட ட்வீட்டை தான், இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பொங்கல்
தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக திமுக, அதிமுக அரசுகள் கடந்த காலத்தில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தன. கடந்த 2008ஆம் ஆண்டு தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இருப்பினும், அதன் பின் சில ஆண்டுகளிலேயே ஆட்சிக்கு வந்ததது அதிமுக அரசு கடந்த 2011இல் இந்த அரசாணையை ரத்து செய்து சித்திரை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது.

பொங்கல் 2022
திமுக இப்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பான விவாதங்களும் கூட மீண்டும் எழுந்தது. அதாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து விரைவில் அரசாணை நிறைவேற்றப்படும் என்று திமுக ஆதரவாளர்கள் பலரும் தெரிவித்தனர். அதற்கேற்ப சில பகுதிகளில் பொங்கலுக்குக் கொடுக்கப்படும் பரிசு தொகுப்பு பையில் 'இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டு அச்சிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கார்த்தி சிதம்பரம்
தை திருநாளாம் பொங்கல் தினத்திற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் பதிவிட்ட ட்வீட்டை தான் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டரில், "அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். #HappyPongal.. எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி அன்றுதான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை தான் இணையத்தில் உள்ள திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நெட்டிசன்கள்
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணிக் கட்சியின் கொள்கைக்கு எதிராகப் பேசலாமா என விமர்சித்து வருகின்றனர். சிலர் பாரதிதாசனின் "நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு" என்ற பாடலை பதிலாக அளித்து வருகின்றனர். இன்னும் சிலர், "தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக மாறுபட்ட கருத்து இருந்தால் பொங்கல் வாழ்த்து மட்டும் சொல்லிவிட்டுப் போகலாமா? ஏன் தேவையில்லாமல் சித்திரை 1 குறித்துப் பேசுகிறார்கள்" என்றும் பதில் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications