Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

79வது சுதந்திர தினம்! நாட்டின் சுதந்திரம் உயிருக்கு நிகரானது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஞானம் ,வீரம் , மானம், கற்பு , இரக்கம் ஆன்மிகம் என்று அனைத்திலும் முதன்மை வகிக்கின்றதென்ற மகாகவியின் கூற்றுப்படி இன்றும், உலகளவில் இந்தியா தன்னை முன்னிறுத்துகிறது. தாய் நாட்டைக் கொண்டே அறியப்படுகின்றோம். அதன் பாரம்பரியம், கலாச்சாரம் மானுடம் பெருமை கொள்ளும் காரணியாகும் . இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ வேறுபட்ட மக்களைக் கொண்டிருக்குமாயின் அதனைப் பன்மைத்துவம் கொண்ட நாடு அல்லது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு எனக் குறிப்பிடலாம். அப்படிப்பட்ட இயற்கையாக உந்தப்பட்ட பன்முகத்தன்மை, தனித்துவம் கொண்ட இந்தியா அதன் நனிமிகு சிறப்பம்சங்கள் போற்றுதலுக்கு உரியது.

இந்நாட்டின் இறையாண்மையோடு பின்னிப் பிணைந்துள்ள பன்முகத் தன்மையை வாழ்வின் மையக்கருவாக அடைகாத்தல் அவசியமாகும். நாட்டின் மீதுள்ள பிரியத்தின் இதயத் துடிப்புகளைக் கவனத்தில் கொள்ளுதல் கடமைகளில் ஒன்று.

Independence Day

பிறந்து, வளர்ந்து, உற்றார் உறவினர்களுடன் வாழ்ந்த நபிகளாருக்கு மக்காவில் வாழ்வது கேள்விக்குறியாக மாறியது, எதிரிகளின் அடக்குமுறைகள் நபிதோழர்களின் வாழ்வாதாரங்களை நசுகச் செய்தன. இடர்பாடுகள் அதிகரித்த தருணம் ,மதினாவை நோக்கி நகர அல்லாஹ்வால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவே, ஹிஜ்ரத் என்ற பெயர்பெறுகிறது. உலக வரலாற்றில் பல மாற்றங்களின் முதல் அத்தியாயமாக அமைந்து போனது இந்தப் பயணம். இதைக்கொண்டே இஸ்லாமிய நாட்காட்டி வகுக்கப்படுகிறது. சமத்துவம், சகோதரத்துவம், தலைமைப் பண்பு, போன்ற நுண்ணியப் படிப்பினைகளுக்கு அடித்தளமாக மாறிப்போனது இப்பயணம்.

பிறந்து, வளர்ந்த நகரத்தை விட்டு துறந்து செல்ல நபிகளாருக்கு மனம் கைகுலுக்கவில்லை . மனஇறுக்கம் நிழலாகப் பின்தொடர்ந்துகொண்டிருக்க, இறைக் கட்டளையை மீற முடியாத சூழ்நிலையில் மதினாவை நோக்கி நபிகளாரின் கால்கள் நடக்கத் துவங்கின. மக்கா நகரத்தின் மீதுள்ள காதல் சுடர்விட்டு எரியத் தொடங்கி .

"மக்காவே நீ உலகிலேயே அல்லாஹ்விடத்தில் மிகவும் விருப்பமான பூமி. உன் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேன்"

என்று கூறி விடைபெறும் தருணத்தில். நபிகளாரின் நாட்டுப்பற்றை நன்குணர்ந்து மக்காவை நோக்கி கட்டாயம் திருப்புவோம், இதுத் தற்காலிக நடைமுறையே அன்றி வேறில்லை என்ற வாக்குறுதி அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. (பார்க்க :அல்குர்ஆன் : 28:85)

மனிதனின் இயல்பில் ஒட்டி பிறக்கும் நனிமிகு பண்பு நாட்டுப்பற்று. அது, நபியவர்களிடமும், நபித்தோழர்களிடமும் உணரப்பட்டது. நாட்டுப்பற்றென்ற ஆணி வேரின் தாகத்தை நிவர்த்தி செய்து நபிகளார்க்கும்,நபிதோழர்களுக்கும் சுபச் செய்தியை அல்லாஹ் அருளுவானென்ற நம்பிக்கையே மிச்சமாக இருந்தது. இப்பயணத்தில் பல்வேறுபட்ட சரித்திரச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அங்கு இயற்றப்பட்ட மதீனா சாசனத்தை இன்றும் உலகம் வியந்து பார்க்கின்றது .
மக்கா நகரின் மீதுள்ள பிரியம் நாளுக்கு, நாள் நெருப்புத் தழல்களிருந்து தொடரும் புகைப் போலேவே புகைந்துகொண்டிருந்தது.

அதன் தேடுதல் மீண்டும் அல்லாஹ்விடமே தஞ்சம் புகுந்து கொண்டது. நபித்தோழர்களுக்கும் தாய் நகரின் மீதுள்ள தேடல் மடை உடைப்பைக் கடந்தது . ஹிஜ்ரி எட்டாமாண்டு அகிம்சையாய் வெற்றி கொண்டு மக்காவிற்குள் இறைவனைப் போற்றியவாறு நுழைதலில் இறைவன் அன்றளித்த வாக்கு கண்முன்பு நிழலாடியது.

இஸ்லாம் உலகளாவிய மார்க்கமாக விரவ ஹிஜ்ரத் முதல் காரணியாகும். இது, உலகிற்குப் பல பாடங்களைப் பயிற்று தருகிறது. இதன் ஆழத்தை உற்றுநோக்கினால் நாட்டுப்பற்றும் இணைத்திருப்பதை நுண்ணியயமாக உணரலாம். நாம் வாழ்கின்ற நாட்டை நேசிப்பது , அங்கு வாழ்பவர்களை சக ஊன்களாகக் கருதுவது ,அமைதிக்குக் காரணமாக அமைவது, அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது நம்மீது கட்டாயக் கடமை. நாட்டை காதலிப்பது, தேச ஒருமைப்பாட்டைக் காத்தல், சகோதரத்துவம் பேணுதல், நாட்டின் சுதந்திரத்தின் கருக் கலையாமல் அடைகாத்தல், அதன் அடையாளங்களில் மதித்தல் போன்ற உணர்வுகளின் நரம்புகளை உயிரோடு கொண்டிருந்த அகிலத்தின் முன்மாதிரியான நபிகளார் கொண்ட நற்பண்புகளைக் கொள்கைகளாக வகுத்து நாட்டிற்குச் சேவைகள் செய்தல் அறமாகும் .

ஏ .ஆர். ஃ பக்கிர் மொஹம்மத் ராவுத்தர் , குஞ்ஞாலி மரைக்காயர், சிராஜ்-உத்-தவ்ளா , ஜாஃபர் அலீ,,தனது வயதில் பத்து ஆண்டுகள் சிறையில் கழித்த பெருந்தலைவர் காமராசர், மௌலவி அஹ்மதுல்லாஹ் ஷா மதராஸி, தந்தை பெரியார், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், நேதாஜி படையில் கணிசமான முஸ்லிம்கள், கூடுதலாக, ஆலிம்கள் என்றழைக்கப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், கதராடை அணியாத மணமகன் திருமணத்தில் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று ஃபத்வா (மார்க்க தீர்ப்பு) அளித்திருந்தனர். இதுபோன்று பல தலைவர்களின் உயிர்த் தியாகத்தில் பூத்த சுதந்திரம் நம் சுவாசத்தில் கலந்துள்ளது.

பாகிஸ்தான் என்ற நாடு 1947 ஆகஸ்ட் 14-இல் இந்தியாவில் இருந்து பிரிந்தது.இக்கால கட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியாகவும் பாகிஸ்தான் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியாகவும் இரண்டாக பிரிந்தது. அதற்கு உண்டான சொத்துக்களை இரண்டாக பிரித்த போது இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 17 லட்சம் ரூபாய் பங்கு தொகை கொடுப்பதற்கு முன்வந்தபோது பாகிஸ்தான் எங்களின் அன்னிய நாடு அந்த நாட்டின் மூலம் வருகின்ற பணத்தை பெற மாட்டேன் என்று சொல்லி, எங்கள் நாட்டில் நாங்கள் சம்பாதித்துக் கொள்வோம்; நீங்கள் செய்ய வேண்டியது விடுதலை பெற்ற பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை மக்களான இந்துக்கள், சீக்கியர்கள், கிருத்துவர்கள், பார்ஸிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்று கூறி சுயமரியாதையோடு வெளியே வந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.(இந்து தமிழ் திசை)

இப்படியாகத் தேசத்தின் மீது நேசம் கொண்ட அரசியல் ஆசான்களின் வழிகாட்டல்கள் நம் கண்முன் பூத்துக்குலுங்குகின்றன. நாட்டின் பாதுகாப்பில் கவனம் கொள்வதை ஆயிரம் ஆண்டுகள் விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு இரவைவிட மேன்மையானது என்கிறது நபிமொழி ஒன்று . முன்னோர்களின் இரத்தத்தில் பிறந்த சுதந்திரத்தை இதயசுத்தியுடன் காக்கவேண்டும் . உலக அரங்கில் இந்தியாவின் தேசியக்கொடியின் கம்பீரம் சிதையாமல் பறக்க, நம் நாட்டை உயிருக்கு நிகராக நேசித்தல் அவசியமாகும். உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும் நாட்டை காதலிப்போம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.. ஜெய்ஹிந்த்.

-A.H.யாசிர் அரபாத் ஹசனி லால்பேட்டை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+