அமெரிக்காவின் USAID நிதி உதவி.. சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ்.. விளக்கம் அளித்த மத்திய அரசு
சென்னை: அமெரிக்காவின் சர்வதேச நிதி உதவியான USAID நிதி உதவி இந்தியாவிற்கு வழங்கப்பட்டதாக வெளியான செய்திகள் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க USAID நிதி பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்த கருத்துக்கள் இந்திய அரசால் திட்டவட்டமாக மறுக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா வழங்கிய USAID-ன் நிதி இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் செயல்முறைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்று நிதி அமைச்சகத்தின் தரவு உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தை வைத்து இந்தியாவிற்கும், மத்திய அரசுக்கும் எதிரான பிரச்சாரங்களை கையில் எடுத்து உள்ளது காங்கிரஸ். முக்கியமாக சர்வதேச அரங்கில் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் கருத்துக்களை வைத்து வருகிறது.
இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கிய USAID நிதி: வதந்தியும் உண்மையும்
நிதி அமைச்சகத்தின் 2023-24 ஆண்டு அறிக்கையின்படி USAID நிதி இந்தியாவில் ஏழு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, மொத்த நிதி சுமார் $750 மில்லியன். இந்த நிதி முதன்மையாக விவசாயம், நீர் சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில் டிரம்ப் சொன்னது போல வாக்காளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
டிரம்பின் குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, அமெரிக்கா வங்கதேசத்திற்குத்தான் அரசியல் ரீதியாக நிதி வழங்கியது. இந்தியாவிற்கு தேர்தல் ரீதியான வேலைகளை செய்ய நிதி வழங்கவில்லை என்பது உறுதியாகிறது. வங்கதேசத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக மாணவர்களிடையே அரசியல் மற்றும் ஜனநாயக ஈடுபாட்டை அதிகரிக்க 2022 ஆம் ஆண்டில் வங்கதேசத்துக்கு 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டதாக விசாரணை அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தப் பிரச்சினையை பற்றி விளக்கமாக பேசி உள்ளார், USAID இந்தியாவில் நல்லெண்ணத்துடன் செயல்படுகிறது, நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, தேர்தல் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று விளக்கம் அளித்தார். வெளியுறவு அமைச்சகம் (MEA) டிரம்பின் கருத்துக்கு அளித்த விளக்கத்தில், டிரம்ப் சொன்ன கருத்துக்கள் ஆழ்ந்த கவலைக்குரியது, இந்தியாவின் தேர்தல் செயல்முறை சுதந்திரமாகவும் இறையாண்மையாகவும் உள்ளது, அவரின் கருத்து ஆதாரமற்றது என்று விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் சொன்ன இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கள்
USAID விவகாரம் குறித்து அமெரிக்கா சொன்ன கருத்து, அதற்கு மத்திய அரசு சொன்ன விளக்கத்தோடு இந்த பிரச்சனை முடிந்து இருக்க வேண்டும். ஆனால் இதில் காங்கிரஸ் தலையிட்டது பிரச்னையை மோசமாக்கி உள்ளது. இந்தியாவிற்கு எதிரான சில கருத்துக்களை இதில் காங்கிரஸ் சர்வதேச அளவில் தெரிவித்தது. இந்தியாவிற்கு எதிராக சர்வதேச அளவில் காங்கிரஸ் கருத்துக்களை வைப்பது இது முதல்முறை அல்ல.
.
OCCRP சர்ச்சை
Organised Crime and Corruption Reporting Project (OCCRP) என்ற அமைப்பில் இருந்து வரும் அறிக்கைகளை காங்கிரஸ் அடிக்கடி பயன்படுத்தி இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் நடக்கும் பிஸ்னஸ்களுக்கு எதிராகவும் கூட காங்கிரஸ் கருத்துக்களை சொல்லி இருக்கிறது. இந்தியாவின் நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று உறுதியாக கூறிய போதிலும் காங்கிரஸ் தொடர்ந்து இதே கருத்துக்களை வைத்து வருகிறது. உதாரணமாக Pegasus உளவு தொடர்பாக வெளியான செய்திகள் இதற்கு பெரிய சான்று. Organised Crime and Corruption Reporting Project (OCCRP) என்ற அமைப்பில் இருந்து வந்த Pegasus அறிக்கை மூலம் ராகுல் காந்தி கையில் எடுத்த விவகாரம் ஆகும் இது. இதை இந்தியாவில் பெரிதாக்க முயன்று அவர் தோற்றார்.
இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கு எதிராக காங்கிரசின் செயல்பாடு ஆகும் இது. முக்கியமாக, வங்கதேச பத்திரிகையாளரும் முன்னாள் OCCRP சக உறுப்பினருமான முஷ்பிகுல் ஃபசல் அன்சாரியுடன் ராகுல் காந்தி தொடர்பில் உள்ளார் என்ற புகார் உள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் 2024 இல் தூதராக அதே நபரை நியமித்தது. இது பல் சந்தேகங்களை கிளப்பி உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவை சீர்குலைக்க திட்டமிடும் உலகளாவிய நிறுவனங்களுடன் காங்கிரசுக்கு தொடர்பு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
The Asia Foundation மற்றும் சிஐஏ உடன் தொடர்பு
The Asia Foundation என்ற அமைப்பும் இதில் ஈடுபட்டு இருக்குமோ என்ற சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. 1954 இல் ரகசியமாக The Asia Foundation அமெரிக்காவின் CIA அமைப்பால் நிறுவப்பட்டது. ஜார்ஜ் சொரோஸின் நெட்வொர்க்கின் கீழ் வரும் ஃபோர்டு அறக்கட்டளையால் இந்த அமைப்பிற்கு நிதி வழங்கப்படுவதும் இன்னொரு சந்தேகிக்க கூடிய விஷயம்.
ஜம்மு & காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை இந்த குழுக்கள் ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்புகளுடன் காங்கிரஸ் மறைமுகமாக தொடர்பு வைத்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறதோ என்ற கடுமையான கேள்விகளை இது எழுப்புகிறது.
Freedom House அமைப்பின் சர்வதேச பிரச்சாரம்
ஜார்ஜ் சொரோஸின் ஓப்பன் சொசைட்டி அறக்கட்டளைகளால் (OSF) அதிக நிதியுதவி பெற்ற ஃப்ரீடம் ஹவுஸ் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. உதாரணமாக 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியாவை 'முழுமையாக சுதந்திரமற்ற' நாடு என்று விமர்சனம் வைத்தது. மத்திய பாஜக அரசாங்கம் சிறுபான்மையினரை ஒடுக்குவதாகக் இந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிராக ஒருதலை பட்சமாக பிரச்சாரம் செய்து வருகிறது. சர்வதேச சக்திகளுடன் இணைந்து ஒருதலைப்பட்சமாக இந்தியாவிற்கு எதிராக இந்த அமைப்பு கருத்துக்களை தெரிவிப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. அதிலும் ஃப்ரீடம் ஹவுஸ் USAIDல் இருந்து நேரடியாக நிதி உதவிகளை பெறுவது இன்னும் பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
இந்தியாவில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் தற்போது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்த தொடங்கிவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாக்காளர் எண்ணிக்கைக்கு CEPPS நிதி
USAID அமைப்பில் இருந்து நிதி பெறும் Consortium for Elections and Political Process Strengthening (CEPPS) அமைப்பு உலக அளவில் தேர்தல்களில் தலையிடுவதாக புகார்கள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்த போதுதான் இந்த அமைப்பு இந்தியாவில் தேர்தலுக்கு நிதி தந்ததாக புகார்கள் உள்ளன. 2014 தேர்தல்களின் போது CEPPS மூலம் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக USAID இந்தியாவிற்கு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
USCIRF வெளியிட்ட மத சுதந்திர அறிக்கை
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) இந்தியாவிற்கு எதிராக அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடும். இந்திய அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் (IAMC) கொடுக்கும் அழுத்தம் காரணமாக இந்த அமைப்பு இந்தியாவிற்கு எதிராக அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடும். 'Country of Particular Concern.' என்ற சர்ச்சைக்குரிய லிஸ்டில் இந்தியாவை கொண்டு வர இந்த அமைப்பு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அமைப்பு உலக அரங்கில் இந்தியாவை இழிவுபடுத்த முயன்று வருகிறது.
வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வெளிநாட்டு நிறுவனங்கள், அரசுகளின் தலையீடு இல்லை என்பதை இந்தியா மீண்டும் உறுதி செய்துள்ளது. USAID நிதியுதவி பற்றிய MEA மற்றும் நிதி அமைச்சகத்தின் விரிவான விளக்கங்கள் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து உள்ளது. தேர்தல் குறுக்கீடு பற்றிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்து உள்ளது. அதோடு வெளிநாட்டு சர்ச்சைகளுக்கு காங்கிரஸ் துணை போவதையும் பாஜக அரசு அம்பலப்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் ஜனநாயக விதிகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டாலும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பது பல கேள்விகளை சர்ச்சைகளை எழுப்பி உள்ளது. முக்கியமாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் காங்கிரஸ் தொடர்பில் இருப்பது கடுமையான விமர்சனங்களை சந்திக்க தொடங்கி உள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் காங்கிரஸ் வைக்கும் கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்திக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications