டாப்-4 நாடுகளில் இந்தியா.. விரைவில் 3ஆம் இடம் நமக்கு! துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பெருமிதம்!
சென்னை: இந்தியா தற்போது உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. பொருளாதார ரீதியாக நான்காவது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் முதலிடத்தை அடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி நடைபெற்ற 22-வது பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

விழாவில் பேசிய அவர், " பட்டமளிப்பு விழா என்பது வெறும் பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நிகழ்வு மட்டுமல்ல. மாணவர்களின் ஒழுக்கம், செயல்பாடு மற்றும் வாழ்க்கை மீதான ஒட்டுமொத்த அணுகுமுறையும் முக்கியமானது.
சி.பி. ராதாகிருஷ்ணன்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை உலகமே பாராட்டியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் உலக நாடுகளுக்கும் சென்றது. கொரோனா காலத்தில் இந்தியாவின் மருந்து உற்பத்தி மற்றும் மருத்துவத் துறையின் பங்களிப்பை பல்வேறு நாடுகள் பாராட்டியது. அண்மையில் கென்யா நாடாளுமன்றம் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது. இந்தியா தனது மக்களுக்கு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான மருந்துகளை வழங்கியது.
இந்திய பொருளாதாரம்
இந்தியா தற்போது உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. பொருளாதார ரீதியாக நான்காவது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் முதலிடத்தை அடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள்
இந்தியாவின் வளர்ச்சிக்கும், நாட்டின் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இளைஞர்கள் மிக முக்கியமானவர்கள். இளைஞர்கள் தங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியை மட்டும் பார்க்காமல், நாட்டின் வளர்ச்சியிலும் பங்களிக்க வேண்டும். பாடத்திட்டத்தின் மூலம் பெறப்படும் கல்வி மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கலாம். ஆனால், வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு கல்வியுடன் ஒழுக்கம், நல்ல நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை அவசியம்.
போதைப் பொருட்கள்
இளைஞர்கள் மது மற்றும் போதைப் பழக்கங்களில் இருந்து முழுமையாக விலகி இருக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. போதைப் பொருட்கள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எந்த வகையிலும் பயன் தராது. அவை உடல்நலத்தையும் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடியவை. எனவே, மாணவர்கள் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டு, தங்களுடைய எதிர்காலத்தை பொறுப்புடன் கட்டமைக்க வேண்டும்.
Vice President Shri C. P. Radhakrishnan graced the 22nd Convocation of S.R.M. Institute of Science and Technology (SRMIST) at Kattankulathur, Chengalpattu near Chennai today.
— Vice-President of India (@VPIndia) August 16, 2026
The Vice President said the greatest strength of Bharat is its people, particularly its youth. Sharing… pic.twitter.com/8yi607z7he
நாட்டின் முன்னேற்றம்
ஒவ்வொரு இளைஞரும் நாட்டின் சட்டத் திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தனிப்பட்ட முன்னேற்றத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும். நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உழைத்து, தங்களுடைய திறமையை சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் உற்சாகத்துடன் கல்வி கற்று இன்று பட்டம் பெறுவதற்கு பெற்றோர்களின் ஆதரவும் ஊக்கமும் முக்கிய காரணம். தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்காக பாடுபட்ட பெற்றோர்களுக்கு பாராட்டுகள்.
இளைஞர்களின் பங்களிப்பு
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுவிட்டதுடன் மாணவர்களின் கற்றல் முடிவடைந்து விடக்கூடாது. வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். புதிய கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் அல்லது தனித்திறனை மேம்படுத்தும் விஷயங்கள் என எதுவாக இருந்தாலும், தினமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களது திறமையை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்" என்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
