18 ஆண்டுகளாக ஒரே இடத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தியா! அடுத்து இதுதான் நடக்கும்! ஆய்வாளர்கள் ஷாக்
சென்னை: கடந்த 2007ம் ஆண்டு குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. ஆனால் இப்போது வரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இதே இடத்தில் நீடிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இதே நிலை நீடித்தால், இந்திய பொருளாதாரம் பொறியில் சிக்கிக்கொண்டதாக அர்த்தம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா இதே நிலையில்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே நாட்டின் எதிர்காலம் குறித்து பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதனை இஷான் பஷி எழுதியிருந்தார். அதில்தான் மேற்குறிப்பிட்ட தகவல்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். சர்வதேச நாடுகளின் வளர்ச்சியை கணக்கிட, அந்நாட்டின் மக்களின் வருமானம் எவ்வளவு என்று கணக்கெடுத்து பார்த்தால் தெரிந்துவிடும். இந்த கணக்கீடுகளை கொண்டு 4 வகையாக நாடுகள் பிரிக்கப்படுகின்றன.
1. குறைந்தபட்ச வருமானம் கொண்ட நாடுகள்
2. குறைந்தபட்ச நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்
3. உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்
4. உயர்தர வருமானம் கொண்ட நாடுகள்
இந்தியாவை எடுத்துக்கொண்டால் நாம் 2வது இடத்தில் இருக்கிறோம். அதாவது குறைந்தபட்ச நடுத்தர வருமானம் கொண்ட நாடு நம்முடையது. இந்தியாவின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI per capita) ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.16 லட்சம் என இருக்கிறது.
சரி இதில் என்ன சிக்கல் என கேட்கிறீர்களா? சிக்கல் இருக்கிறது. அதாவது இந்த 'குறைந்தபட்ச நடுத்தர வருமானம்' கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னரே நுழைந்துவிட்டது. விஷயம் என்னவெனில் இன்னும் இதிலிருந்து நாம் முன்னேறவில்லை என்பதுதான். ஒரு நாடு 28 ஆண்டுகளாக இதே நிலையில் நீடித்தால், அது பொருளாதார பொறியில் சிக்கிக்கொண்டது என்று அர்த்தம்.
இல்லீங்க.. இந்தியா இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல முன்னுக்கு வந்துடும் என நீங்கள் நினைத்தால், அந்த கருத்து வரவேற்கத்தக்கதுதான். சர்வதேச நாணய நிதியம் (IMF) கணிப்புப்படி, 2029ல் இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. அது நிஜமானால் இந்தியா உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம் பிடிக்கும். எனவே அரசு இதற்கேற்ப திட்டங்களை சரியாக வகுத்து செயல்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதாவது நாடு முழுவதும் வருமானம் சமமாக இல்லை. உதாரணத்திற்கு தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ஹரியானா, டெல்லி உள்ளிட்டவை உயர் வருமானம் கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் இது குறைவாக இருக்கிறது. ஆகவே அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மத்திய அரசு சாத்தியமாக்க வேண்டும்.
அது தவறும் பட்சத்தில், புலம் பெயர்தல் அதனால் ஏற்படும் கலாச்சார மாற்றங்கள், இனக்குழு மோதல் போன்றவை தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
என்ன வாசகர்களே கடந்த 18 ஆண்டுகளாக இந்தியா ஒரே இடத்தில் இருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?












Click it and Unblock the Notifications