தமிழக அரசியலில் திமுக முன்னிலையில் இருக்கிறது.. அதிமுக-பாஜக உறவில் இழுபறி.. இந்தியா டுடே கணிப்பு
சென்னை: தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னிலையில் இருக்கிறது என்று இந்தியா டுடே வார இதழ் கணித்துள்ளது. தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சீரான ஒருங்கிணைப்பு இல்லை என்றும் நிலையற்ற நிலைப்பாட்டு காரணமாக அ.தி.மு.க.-பா.ஜனதா உறவு நீண்ட இழுபறியில் உள்ளதாகவும் கூறியுள்ளது. நடிகர் விஜய், நிச்சயமாக, அரசியலில் ஒரு எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அவரது கட்சி அதிகளவில் இளைஞர்களை ஈர்த்துள்ளது. ஆனால் தேர்தல் ரீதியாக அது வாக்குகளாக மாறுமா? என்பது தெரியவில்லை என்றும் இந்தியா டுடே கணித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. அதாவது இன்னும் தெளிவாக சொல்வது என்றால் 11 மாதங்களில் தேர்தல் வந்துவிடும். 10 மாதங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும். 2019, 2021, 2024 என அடுத்தடுத்து மூன்று தேர்தல்களில் திமுக கூட்டணியே வலுவான வெற்றி பெற்றுள்ளது. எனவே சட்டசபை தேர்தலில் எளிதாக வெல்லும் முனைப்பில் திமுக இருக்கிறது. அதேநேரம் எதிர்க்கட்சிகளிலேயே சரியான ஒற்றுமை இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

விஜய் எப்படி
தவெக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் , இந்த முறை தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றாலும், வாக்குகள் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.. இது ஒருபுறம் எனில், அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளும் கூட்டணி என்று அறிவித்தாலும், ஒற்றுமையான உணர்வு இருக்கிறதா என்றால், தெரியவில்லை.. இருகட்சி தொண்டர்களுமே சமூக வலைதளங்களில் மாறி மாறி குற்றச்சாட்டுகளை இன்றும் வைத்து வருகிறார்கள்.
அதிமுக பாஜக ஒற்றுமையின்மை
அதிமுக, பாஜக இடையே ஒற்றுமையில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை என்னதான் முணுமுணுப்புகள் இருந்தாலும், யாரும் கூட்டணியை விட்டு வெளியே வர தயாராக இல்லை.. இதனால் அந்த கூட்டணி வலுவாகஇருக்கிறது. எனவே தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் எந்த கட்சிக்கு சாதகமாக உள்ளது என்றால் திமுகவுக்கு தான் என்றே பதில்கள் வருகின்றன. தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னிலையில் இருப்பதாக இந்தியா டுடே வார இதழ் கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே கணிப்பு
அந்த வார இதழில் கூறுகையில், "மே 7, 2021 அன்று மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றபோது, அவர் தனது நீண்ட பொது வாழ்வில் முதல் முறையாக 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 4 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பாரம்பரியத்திற்கான குறிப்பு வெறும் பகட்டான வார்த்தை அல்ல என்பது தெளிவாகியுள்ளது,
ஸ்டாலின் பாதுகாப்பு வளையம்
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், தி.மு.க. வலுவான நிலையில் இருப்பது மட்டுமல்லாமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசியலில் தனக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளார் என்றே சொல்லலாம். நலத்திட்டங்கள், குறியீடுகள் மற்றும் கூட்டாட்சி எதிர்ப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு அவரது அடையாளத்தை உள்ளூர் நிர்வாகம் மற்றும் அரசியல் யதார்த்தத்தின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்றிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பெரிய அரசியல் - சித்தாந்த ஒளிவட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கட்டுக்கோப்பாக இருக்கிறது.
விஜய் தாக்கம் ஏற்படுத்துவார்
தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சீரான ஒருங்கிணைப்பு இல்லை. நிலையற்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க.-பா.ஜனதா உறவு அதிக இழுபறி உடன் இருக்கிறது. நடிகர் விஜய், நிச்சயமாக, அரசியலில் ஒரு எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அவரது கட்சி அதிகளவில் இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. ஆனால் தேர்தல் ரீதியாக அது வாக்குகளாக மாறுமா? என்பது தெளிவாக தெரியவில்லை.
உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. என்ற சூரிய உதய சக்தியால் ஓரளவு இளைஞர்களை ஈர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமைத்துவம், "கூட்டாட்சிக்கு தமிழ்நாடு வழிகாட்டியது" என்று எழுத்தாளரும், தி.மு.க. ஊடகப் பிரிவின் இணைச் செயலாளருமான சல்மா கூறியிருக்கிறார்.
திமுக முன்னிலை
நீட், இந்தி திணிப்பு, ஆளுநரின் தலையீடு போன்ற பிரச்சினைகளில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு கூர்மையான எதிர்ப்பை தி.மு.க. பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, த.வெ.க. போதுமான வாக்குகளைப் பிரித்தாலும், அ.தி.மு.க. - பா.ஜனதா பெறும் வாக்குகளை கருத்தில் கொண்டாலும், தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னிலையில் இருப்பதாகவே தெரிகிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications