நான்கு மாநிலத் தேர்தல்களுக்கு செக் வைக்கும் இந்தியா’INDIA Vs NDA.. யாருக்குப் பலம் அதிகம்?..
சென்னை: இந்திய அரசியல் களம் 'என்.டி.ஏ.' V/S 'இந்தியா' என மாறி இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக 26 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா', என்ற (Indian National Developmental Inclusive Alliance) புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்தக் கூட்டணி அறிவித்துள்ள பெயர்தான் இன்றைக்கு நாடு முழுக்க ஹைலைட் ஆன செய்தியாக மாறி இருக்கிறது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் INDIA vs NDA ஏற்படுத்தப் போகின்ற மாற்றம் என்ன? உண்மையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சொல்வதைப் போல் புதிய 'இந்தியா' உருவாகிவிட்டதா?
சிலரிடம் கேட்டோம். கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியை அவர்கள் அலசி ஆராய்ந்துவிட்டார்கள்.
ரவிக்குமார், விசிக
"காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகளின் கூட்டணியைப் பார்த்து பாஜகவுக்குப் பயம் வந்துள்ளது. ஆகவேதான் செத்துப்போன என்.டி.ஏ. என்ற கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான முயற்சியை பாஜக எடுத்துள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல கட்சிகள் வெறும் பெயரளவிலான கட்சிகள் என்பதை மக்கள் அறிவார்கள். அதை அந்தப் பட்டியலைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

பெங்களூருவில் கூடிய இரண்டாவது கூட்டத்தை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையைவிட்டு சோதனை நடத்தினார்கள். அதற்கு எல்லாம் சற்றும் அச்சப்படாமல், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஒரு உறுதியான முடிவை எடுத்திருக்கிறார்கள்.
அடுத்து 'இந்தியா' கூட்டணியின் சார்பாக 11 பேர் கொண்ட ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க உள்ளனர். மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.

பெங்களூரு கூட்டத்திலேயே நாட்டின் பல முக்கியமான பிரச்சினைகளை எல்லாம் தொட்டிருக்கிறார்கள். குறிப்பாக, மணிப்பூர் பிரச்சினை தொடங்கி பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் சில தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டுவருவது வரை பலவற்றைச் சுட்டிக்காட்டி தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
நாங்கள் கூட்டணி வைத்துள்ள 'இந்தியா' என்ற பெயரே ஒரு அபாரமான ஐடியா. இந்தப் பெயரை அறிவித்தபோதே முதல் விக்கெட்டை வீழ்த்திவிட்டார்கள் என்றே சொல்வேன்.
இந்தப் பெயரை அறிவித்த உடனேயே 'இந்தியா'வுக்கு எதிர் பாஜக. 'இந்தியா'வுக்கு எதிர் இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பார்வை வலுப்பெற்றுள்ளது.

வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் ஏதோ இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல. இது இந்தியாவுக்கும் இந்தியாவுக்கு எதிரானவர்களுக்கும் இடையிலான போட்டி என்பதை இந்தப் பெயரே தெளிவுபடுத்தி இருக்கிறது.
இந்தியாவின் தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடியவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கூடியவர்கள் இன்றைக்கு ஓர் அணியில் இணைந்திருக்கிறார்கள். இனி பாஜகவுக்குத் தொடர் வீழ்ச்சிதான். குறிப்பாக, வரும் நவம்பரில் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலில் பாஜக அடியோடு வீழ்த்தப்படும். அதற்கு 'இந்தியா' கூட்டணி முக்கிய பங்களிப்பைச் செய்யும்."

பத்திரிகையாளர் ப்ரியன்
"இந்த 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு தலைவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் செல்வாக்கு மிக்கத் தலைவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கூட்டணியில் உள்ள பல தலைவர்களுக்கு வெவ்வேறாகக் கொள்கைகள் இருக்கின்றன.
ஆனாலும், அவர்கள் ஓர் அணியில் ஏன் சேர்ந்திருக்கிறார்கள் என்றால், 2024க்குப் பிறகு மோடி ஆட்சியில் தொடர்ந்தால், நாட்டில் ஜனநாயகம் என்பதே இருக்காது என்பதை உணர்ந்ததால்தான் ஒன்றுகூடி இருக்கிறார்கள்.
மோடியின் ஆட்சிக்காலத்தில் எல்லா அரசு நிறுவனங்களும் மாசுபட்டுவிட்டன. அதை சங் பரிவார் செய்துவருகிறது. கடைசி புகலிடமாக நீதிமன்றங்கள் இருந்தன. இப்போது அதுவும் கேள்விக்குறியாகி உள்ளது. மக்களிடம் பிரிவினையைத் தூண்ட முயற்சிகள் நடக்கின்றன. 'யூனிட்டி' என்ற பெயரில் uniformity கொண்டுவரப் பார்க்கிறார்கள்.

இதை எல்லாம் பார்த்துத்தான் தங்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட அதை ஒதுக்கி வைத்துவிட்டு, இன்றைக்கு 'இந்தியா' என்ற புதிய கூட்டணியைக் கட்டி எழுப்பி இருக்கிறார்கள். அதைவிடக் கூட்டணிக்கு மிக அழகான பெயரையும் சூட்டி இருக்கிறார்கள்.
அதைக் கண்டு பயந்துபோய் தான் 38 கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணி கூட்டத்தை பாஜக நடத்தி இருக்கிறது. ஆனால், அந்தப் பாஜக கூட்டணியில் 'இந்தியா' கூட்டணியில் உள்ளதைப் போல வலுவான தலைவர்கள் மிகமிகக் குறைவு.
அதை மறைக்கத்தான் மோடி, "ஊழல் கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி உள்ளன' என்கிறார். அவர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை உட்காரவைத்துக் கொண்டு அதை அவர் சொல்வது வேடிக்கை. எடப்பாடி பழனிசாமி மீது 3 சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை மோடி மறந்துவிடக் கூடாது.
மோடி ஒரு தேசிய கட்சியின் தலைவர். ஆனால், ஒரு மாநிலக் கட்சியான திமுகவை அவர் டார்கெட் செய்கிறார். ஏன் அதைச் செய்கிறார் என்றால், காங். கூட்டணியில் திமுக ஒரு வலுவான கட்சி என்பதால் செய்கிறார்."
அருணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
"இந்த நாட்டிற்கு நல்ல மாறுதல்கள் தேவை; ஆனால் அதற்கு முன்பாக நாம் இந்த நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும்' என்று பெங்களூருவில் கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மிக முத்தாய்ப்பான ஒரு கருத்தை முன்மொழிந்திருக்கிறார்.
எனக்கு அது ஒரு மணிவாசகமாகத் தெரிகிறது. திருவாசகமாகத் தெரிகிறது. வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என்று அண்ணாதுரை சொன்னார். அதுபோல நாடு இருந்தால்தான் அதில் நல்ல மாறுதல்களைச் செய்ய முடியும்.
ஆகவேதான் இந்தியாவைக் காப்பாற்ற இன்றைக்கு 'இந்தியா' புறப்பட்டு இருக்கிறது. அருமையான பெயர். மக்களின் மனதில் நிற்கக் கூடிய ஒரு பெயர். இந்திய அணியை எதிர்க்கப் போகிறாரா மோடி? இந்திய அணியை பாஜக வீழ்த்த போகிறதா? என இயல்பாகப் பேச்சுகள் கேட்கத் தொடங்கிவிட்டன.
முதலில் பாட்னாவில் கூடினார்கள். அடுத்து பெங்களூருவில் கூடினார்கள் என்றவுடன் பதறிப்போய் ஆளும் கட்சியான பாஜக, அதே நாளில் ஒரு கூட்டத்தைக் கூட்டி இருக்கிறது. மோடி ஒரு ஆளை எதிர்க்க இத்தனைக் கட்சிகளா என இதுவரை பேசி வந்தாரே அமித்ஷா. பிறகு ஏன் அவ்வளவு பலம் வாய்ந்த தலைவரை வைத்துக்கொண்டு 38 கட்சிகள் கொண்ட கூட்டணி கூட்டத்தை அவசர அவசரமாக நடத்த வேண்டும்?
அப்படி என்றால், பாஜக தலைமையே தங்களின் பலவீனத்தை உணர்ந்துவிட்டது. மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். எனவேதான் இந்தக் கூட்டத்தைப் போட்டியாக நடத்தி இருக்கிறார்கள்."












Click it and Unblock the Notifications