தமிழ்நாட்டில் இந்த ரயில்நிலையங்களில்.. கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் போக முடியாது.. வந்தது புதிய ரூல்
சென்னை: பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுக்கும் பொருட்டு, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோவை, எர்ணாகுளம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு (Waitlisted Ticket Holders) தடை விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் இந்தக் கட்டுப்பாடு ஏற்கனவே அமல்படுத்தப்படவுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே நடைமேடைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மினி கட்டுப்பாட்டு அறைகள்
தீபாவளி மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் அதிக பயணிகள் போக்குவரத்து உள்ள தாம்பரம், சென்னை கடற்கரை, பெரம்பூர், கோவை, திருப்பூர், திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை ஆகிய ஒன்பது ரயில் நிலையங்களை ரயில்வே நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த நிலையங்களில் 24 மணி நேரமும் கூட்ட நெரிசலைக் கண்காணிக்க மினி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ரயில்வே வாரிய வழிகாட்டுதல்களின்படி, முக்கிய ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களுக்கு வெளியே சுமார் 500-600 பயணிகளை தங்க வைக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் அரசு ரயில்வே போலீஸ் (GRP) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, பிரத்யேக காத்திருப்புப் பகுதிகளை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
வெளியே மக்களுக்கு சிறப்பு இடம்
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலுக்கு வெளியே சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் 600 பேர் அமரும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், எழும்பூரில் 100 சதுர மீட்டர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இடம் குறைவாக உள்ளது, ஆனால் பணிகள் முடிந்ததும் விரிவாக்கப்படும். கோவை மற்றும் எர்ணாகுளம் ஆகிய இடங்களிலும் இதேபோன்ற காத்திருப்புப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த இடங்கள், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பயணிகளுக்கான காத்திருப்பு மண்டலங்களாகச் செயல்படும். முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குறைந்த ரயில் சேவைகள் மற்றும் அதிக தேவை காரணமாக, பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பெரும் கூட்டம் அலைமோதுகிறது. மாநிலத்திற்குள் அதிகப்படியான பயணம் மற்றும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களின் வருகையே இதற்கு முக்கிய காரணம்.
இதை மனதில் வைத்தே பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுக்கும் பொருட்டு, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோவை, எர்ணாகுளம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு (Waitlisted Ticket Holders) தடை விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதனால் confirm டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே மேற்கண்ட ரயில் நிலையங்களில் உள்ளே செல்ல முடியும். மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.












Click it and Unblock the Notifications