மதவாத போக்கை கடைபிடிப்பதா..? பிரான்ஸ் அதிபருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கண்டனம்...!
சென்னை: முஸ்லிம்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மீது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், பிரான்ஸ் அதிபரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கண்டிப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பிரான்ஸ் வார இதழ்
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை கூறிவரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனின் இனவாத கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. பிரான்ஸ் வார இதழ் ஒன்றில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உருவம் கற்பித்து கேலிச்சித்திரம் வரைந்த மதவாத நடவடிக்கைக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தொடர்ந்து ஆதரவு அளித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பிரான்சில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து அவர் கூறிவருவது தவறானதாகும்.

சம்பிரதாயம்
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் ஓவியம் தீட்டியோ, சித்திரம் வரைந்தோ, உருவம் படைத்தோ, சிலை அமைத்தோ, அழகு பார்க்கும் பழக்கமோ, சம்பிரதாயமோ இஸ்லாமிய மார்க்கத்தில் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. எந்த இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரத்திலும் இந்த பழக்கம் இல்லை.

கேலிச்சித்திரம்
மதச்சார்பின்மை, சிந்தனை, கருத்துரிமை என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டில் பெருவாரியாக வாழும் சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கையையும், உணர்வுகளையும் அவமதிப்பது ஏற்க முடியாதது.பிரான்சில் கேலிச் சித்திரம் வெளியிடும் கலாச்சாரத்தை அதிபர் மேக்ரன் நியாயப்படுத்துவது மதச்சார்பற்ற தன்மையின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துவிடும்.

கோரிக்கை
முஸ்லிம் சமுதாயத்தினரின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புரிந்துகொள்ள பிரான்ஸ் அதிபர் முயற்சி செய்யவேண்டும் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்க்கும் செயல்களில் ஈடுபட்டுவரும் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கும் இளைஞர்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று உலக முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications