இந்தியத்துவம் என்பதற்கு உயர்ந்த பண்பாடு உள்ளது.. அதைக் காப்பாற்றணும்! லதா ரஜினிகாந்த் பரபர பேச்சு
சென்னை: குளோபல் அவர்னஸ் இருப்பது தவறில்லை. ஆனால் இந்திய மனப்பான்மை போய்விட கூடாது என்று லதா ரஜினிகாந்த் கூறினார். மேலும் நாம் மனதார இந்தியர்களாக இருக்க வேண்டும். நாம் எங்கு சென்றாலும் இந்தியத்துவம் என்பது நம்மிடமும், நாம் இருக்கும் இடத்திலும், நம்மை பாதுகாக்கின்ற சூழலிலும் இருத்தல் வேண்டும் என்று அவர் பேசினார்.
செல்போன் யுகத்தில் இளைஞர்கள், ஏன் சில முதியோர் கூட மூழ்கி கிடப்பதால் நமது நாட்டின் பெருமை மிக்க கலாசாரம், அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடுகிறது என்றும் மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி இளைஞர்கள் செல்கிறார்கள் எனவும் ரஜினிகாந்த் நேற்று பேசினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்திடம், மேற்கத்திய நாடுகளின் தாக்கம் தான் இங்கு அதிகமாக இருக்கிறது, நம்முடைய தாக்கம் அங்கு அதிகரித்துவிட்டது என்று ரஜிகாந்த் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு லதா ரஜினிகாந்த் அளித்த பதில் வருமாறு:-

இந்தியத்துவம் என்ற பண்பாடு
எந்த ஒரு புது விஷயத்தையும் ஏற்றுக்கொள்வது தவறில்லை. குளோபல் அவர்னஸ் இருப்பது தவறில்லை. ஆனால் இந்திய மனப்பான்மை போய்விட கூடாது. நம் வாழ்வு முறை, நம் முன்னோர்கள் காட்டிய அழகான வாழ்க்கை முறை போய்விட கூடாது. எதற்கும் அடிமை ஆகிட கூடாது.
ஒரு உடையாலோ, பேசுகின்ற முறையாலோ, ஒருத்தரது வாழ்க்கை முறையாலோ இது நிர்ணயிக்கப்படுவது இல்ல. மனதார இந்தியர்களாக இருக்க வேண்டும். நாம் எங்கு சென்றாலும் இந்தியத்துவம் என்பது நம்மிடமும், நாம் இருக்கும் இடத்திலும், நம்மை பாதுகாக்கின்ற சூழலிலும் அது இருத்தல் வேண்டும்.
அது நமக்கு மட்டுமில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களும் அவர்கள் அவர்கள் நாட்டை மனதில் வைத்திருப்பார்கள். அதுமாதிரி இந்தியத்துவம் என்பதற்கு ஒரு உயர்ந்த பண்பாடு இருக்கிறது. அந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும். பண்பாடு என்பது மனதில் இந்தியர் என்பதை ஆரோக்கியமாக வைத்திருப்பது தான். ஒருத்தர் ஒரு ஆடை அணிவதாலோ, பேசுகிற மொழியினாலோ எல்லாம் கிடையாது. நீங்க குளோபல் சிட்ன்ஸாகவும் இருக்கலாம். 100 சதவீதம் இந்தியனாகவும் இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தயா பவுண்டேஷன் அமைப்பு
லதா ரஜினிகாந்த், தயா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனராக உள்ளார். பக்தி சேவா சமயம் அக்ரிபிட் அமைப்புடன் இணைந்து பாரத சேவா மற்றும் சங்கல்பம் என்ற திட்டத்தை லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார். இந்து சமயத்தில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பதும், சனாதன தர்மத்துக்கான சேவை செய்வது உள்ளிட்டவையும் இத்திட்டத்தின் நோக்கங்களாக உள்ளது.
இதன் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. இந்த தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். திட்டங்களின் தொடக்க விழாவிற்கு ரஜினிகாந்த், வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், ரஜினிகாந்த் பேசியதாவது:-
தியானம், யோகா
செல்போன் யுகத்தில், இளைஞர்கள், ஏன் சில முதியவர்கள் கூட மூழ்கி கிடப்பதால் நமது நாட்டின் பெருமைமிக்க கலாசாரம், அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடுகிறது. மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாசாரம் பண்பாட்டில் நிம்மதி கிடைக்கவில்லை என்று சொல்லி, உண்மையான மகிழ்ச்சியை தேடி இந்தியா பக்கம் வருகிறார்கள்.
தியானம், யோகா, இயற்கையான வாழ்க்கை போன்றவைகளை உதாரணமாக சொல்லலாம். எனவே நமது நாட்டின் மகா உன்னதமான கலாசாரம், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும், அந்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று லதா எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வேண்டும்" என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications