இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..!
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் பெரும்பகுதியை எந்த மாநிலங்கள் உருவாக்குகின்றன என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தக் கூடும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை வெறும் நான்கு மாநிலங்களால் மட்டுமே பங்களிக்கப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவின் ஏற்றுமதி திறன், உலகளாவிய வர்த்தகத்தில் நாட்டின் இடம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், இந்த நான்கு மாநிலங்களின் பங்களிப்பு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

4 மாநிலங்களின் ஆதிக்கம்
இந்த நான்கு கடலோர மாநிலங்களின் ஆதிக்கம் தான், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அமைப்பை கட்டிக்காக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால், இந்த வளர்ச்சிக்கு வெறும் 4 மாநிலங்கள் மட்டுமே பங்கு வகிக்கிறது, மற்ற 28 மாநிலங்களின் பங்கீடு மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் நாட்டின் வளர்ச்சி, வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவை தொய்வை சந்தித்து வருகிறது.
ஏற்றுமதியில் குஜராத் முதலிடம்... தமிழ்நாடு 3வது இடம்
கிடைத்துள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் குஜராத் மட்டும் சுமார் 27 முதல் 30 சதவிகிதம் வரை பங்களிக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு, வைரத் தொழில், ரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துத் தயாரிப்புகள் ஆகியவை அந்த மாநிலத்தின் முக்கிய ஏற்றுமதி துறைகளாக உள்ளன.
மகாராஷ்டிரா சுமார் 15 முதல் 17 சதவிகித பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆட்டோமொபைல், பொறியியல் பொருட்கள், ஜவுளி மற்றும் மருந்துத் துறைகள் அங்கு ஏற்றுமதியை முன்னெடுத்து வருகின்றன.
தமிழ்நாடு சுமார் 12 முதல் 14 சதவிகித பங்களிப்புடன் நாட்டின் முக்கிய ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி, ஆட்டோமொபைல் துறை, ஜவுளித் தொழில் ஆகியவை தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
கர்நாடகா 7 முதல் 8 சதவிகித பங்களிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்திகள் அங்கு முக்கிய பங்காற்றுகின்றன.
ஏன் இந்த மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன?
இந்த நான்கு மாநிலங்களுக்கும் ஒரு முக்கியமான பொதுவான அம்சம் உள்ளது. அவை அனைத்தும் வலுவான தொழில் உள்கட்டமைப்பு மற்றும் உலக சந்தையுடன் நேரடி இணைப்பை கொண்டுள்ளன.
குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் நீண்ட கடற்கரைகளையும் முக்கிய துறைமுகங்களையும் கொண்டுள்ளன. இதனால் சரக்குகளை உலக நாடுகளுக்கு அனுப்புவதற்கான செலவும் நேரமும் குறைகிறது.
அதேசமயம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ), தொழிற்பூங்காக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் தொழில் சூழல் ஆகியவை ஏற்றுமதி வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சாலை பணியாளர் வலிமையை பயன்படுத்தி மின்னணு சாதனங்கள், செல்போன்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சி
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 863.11 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 4.59 சதவீதம் அதிகமாகும். இதில் சேவை ஏற்றுமதி 421.32 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பொருட்கள் ஏற்றுமதி 441.78 பில்லியன் டாலராக உள்ளது. இந்த வளர்ச்சியில் நான்கு மாநிலங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது.
கடலோர மற்றும் உள்நாட்டு மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி
இந்த நான்கு மாநிலங்களின் ஆதிக்கம், இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் இடைவெளியை உருவாக்கியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட உள்நாட்டு மாநிலங்கள் இணைந்து வெறும் 5 சதவீதம் ஏற்றுமதியை மட்டுமே பங்களிக்கின்றன. இந்த புவியியல் ஏற்றத்தாழ்வு, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சியை பாதிக்கும் விஷயமாக உள்ளது.
அரசின் முயற்சிகள்
இந்த இடைவெளியை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மாநிலங்களின் உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த 4 கடலோர மாநிலங்களின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்துவது இன்னும் பெரிய சவாலாக உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி சில மாநிலங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகும். எனவே, மற்ற மாநில அரசுகள் ஏற்றுமதி திறனை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications