காணிக்கை கையாடல்.. எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லீங்க.. வாண்டட்டாக வந்து சொன்ன கோயில் பொருளாளர்
லக்னோ: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் (Shri Ram Janmabhoomi Teerth Kshetra) முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கோயிலுக்கு வரும் காணிக்கைகளை எண்ணும் பணியில் தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.
ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை மற்றும் காணிக்கைகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது.

இந்த முறைகேடு புகார்களுக்குப் பொறுப்பேற்று, அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் மூத்த அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய கூட்டத்தில் அவர்களின் ராஜினாமா குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில் வளாகத்திற்குள் இன்று மதியம் 3 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.
நிலைமை இப்படி இருக்கையில், காணிக்கையை எண்ணும் பணிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க என்று கோயில் பொருளாளார் தேவ் கிரி கூறியிருக்கிறார். பொருளாரருக்கு நிதியை கண்காணிப்பது, கையாள்வதுதான் வேலை. ஆனால், காணிக்கை விஷயத்தில் எனக்கு சம்பந்தம் இல்லை என்று அவர் சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இல்லையே! என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இது குறித்து பொருளாளார் கூறுகையில், "நன்கொடைகளை எண்ணும் பணி வங்கி அதிகாரிகள் மற்றும் பிரத்யேகக் குழுவினரால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இதில் பொருளாளர் என்ற முறையில் எனக்கு நேரடிப் பங்கு ஏதுமில்லை. நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த எந்தவிதமான விசாரணைக்கும் நான் தயார், அதையே நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக கையில் எடுத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், கோயில் விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.
இந்த பரபரப்புகளுக்கு நடுவில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள், நிதி மேலாண்மை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க அறக்கட்டளையின் முக்கியக் கூட்டம் கூடவுள்ள நிலையில், பொருளாளரின் இந்த அதிரடி கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications