“வெட்கமாயில்லையா விஜய் அரசே?” மு.க.ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அகற்றம்! திமுக கேள்வி
சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மதியம் செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் உள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தைப் பார்வையிடுகிறார். இந்நிலையில், நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கிறது. இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து திமுக தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.

2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24.02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு.
ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?" என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஆனால், இந்த கல்வெட்டு நெடுஞ்சாலை ஓரமாக இருந்ததால் பாதிப்புக்கு உள்ளானதாகவும், எனவே சீரமைக்கவே கல்வெட்டு அகற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இருப்பினும் முதல்வர் வருகை காரணமாக, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அகற்றப்பட்டிருப்பது அரசியல் தளத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications