ரஜினி ரசிகரின் மஞ்சள் நீராட்டு விழாவில் லதா ரஜினிகாந்த்.. ' செலவு வேண்டாம்.. காரணமாகவே சொல்கிறேன்'
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர் மன்ற இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லதா ரஜினிகாந்த், அந்த குடும்பத்தினரை வாழ்த்தி பரிசு வழங்கினார். தொடர்ந்து பேசிய லதா ரஜினிகாந்த், என்னை வரவேற்பதற்கு நிறைய செலவு செய்யாதீர்கள்.. எனது ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும்.. எல்லாம் ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என 1996 முதல் அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர். 1996ல் ஒருவேளை இப்போது விஜய் போன்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் முடிவுகள் பெரிய அளவில் மாறியிருக்கும் என்று ரஜினியின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். எனினும் 2020 காலகட்டத்தில் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் ரஜினிகாந்த் கூறினார். இதனால் உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள், ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா தீவிரமாக பரவியதால் அரசியலில் இருந்தே பின்வாங்கினார்.

சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய், புதிதாக கட்சி ஆரம்பித்து, வெற்றிப்பெற்று, முதல்வராகிவிட்டார். இந்த சூழலில் ரங்கராஜ் பாண்டேவிற்கு யூடியூப் சேனல் ஒன்று அளித்த பேட்டியில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறும் போது, ரஜினிகாந்த் பெரிய தலைவர். 2021ல் அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய அளவில் மிஸ்ஸாகிவிட்டது. நான் கொஞ்சம் மோசமாக பீல் செய்தேன். அவர் வரவில்லை என்பதற்காக இல்லை. அவர் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது. ஏனெனில் ரஜினிகாந்திற்கு பல திட்டங்கள் இருந்தன, நிறைய கனவுகள் இருந்தன. ஆனால் கோவிட் காலத்தில் அப்படி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. லீ குவான் யூ செய்தது மாதிரி செய்ய வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால்தமிழகத்தில் ஒரு பெரிய தலைவரை நாம் மிஸ் செய்துவிட்டோம் என்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இந்த சூழலில் தாம்பரத்தில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ரஜினி முருகனின் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் லதா ரஜினிகாந்த் நேற்று மாலை பங்கேற்றார். அவரை ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ரஜினிமுருகனின் மகளை வாழ்த்தி, பரிசுகளை லதா ரஜினிகாந்த் வழங்கினார். லதா ரஜினிகாந்த் தங்கள் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்றதை ரஜினி முருகனின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ந்தனர்.ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்ததால், அவருக்கு பதில் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது லதா ரஜினி காந்த், அவர்களிடம், என்னை வரவேற்பதற்கு நிறைய செலவு செய்யாதீர்கள்.. எனது ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும்.. எல்லாம் ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினாராம். தொடர்ந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனை சமூக ஊடகங்களில் பார்த்த சிலர்,ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இதை யாரும் விரும்பமாட்டார்கள்..
இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் என்ன செய்தீர்கள்,, இப்போது எதற்கு இதை செய்கிறீர்கள்.. நான் ரஜினி ரசிகர்தான்.. ஆனால் திடீரென இதுபோன்ற நிகழ்சிகளில் நீங்கள் கலந்துகொள்வது சரியில்லை என தோன்றுகிறது.. ரசிகர்கள் எல்லாம் சோர்ந்துபோய்விட்டனர் .. இப்போது இது புதிதாக உள்ளது என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications