IndiGo: சென்னை ஏர்போர்ட்டில் தொடரும் குழப்பம்.. 7வது நாளாக இண்டிகோ சேவை பாதிப்பு.. 71 விமானங்கள் ரத்து!
சென்னை: கடந்த ஒரு வாரமாகவே இண்டிகோ விமானச் சேவை நாடு முழுக்க கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானச் சேவையை மீட்டெடுக்க இண்டிகோ தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிலைமை ஓரளவுக்குச் சீரானாலும் கூட இண்டிகோ சேவை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் 71 இண்டிகோ விமானச் சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே இண்டிகோ சேவை நாடு முழுக்க கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னணி விமான நிறுவனமாக இருந்து பல்வேறு நகரங்களுக்கும் இண்டிகோ சேவை கொடுத்து வந்த நிலையில், அது மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த விமானச் சேவையும் மொத்தமாக முடங்கியது.

விமானங்கள் தாமதம்
பல நூறு விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அல்லது முழுமையாக ரத்து செய்யப்பட்டன. இதனால் விமானச் சேவை மொத்தமாக முடங்கும் சூழல் ஏற்பட்டது. நாடு முழுக்க உள்ள விமான நிலையங்களில், பயணிகளுக்கும் இண்டிகோ ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டது. இரு தரப்பும் சண்டையிடும் பல்வேறு வீடியோக்களும் கூட இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது.
விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. நைட் ஷிப்ட் தொடங்கி பல்வேறு விதிமுறைகள் மாற்றப்பட்டு இருந்தது. இந்த ரூல்ஸிற்கு ஏற்ப இண்டிகோ ரெடியாகவில்லை. கூடுதல் பைலட்கள் மற்றும் பணிக் குழுவை வேலைக்கு எடுக்கவில்லை. இதன் காரணமாகவே விமானச் சேவை மொத்தமாக முடங்கியது. இது தொடர்பாக விளக்கம் தர இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸும் கொடுத்துள்ளது.
மெல்லச் சீராகிறது
நிலைமை மிக மோசமாகச் சென்ற நிலையில், மத்திய அரசு தனது புதிய விதிமுறைகளில் சிலவற்றைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றது. அதன் பிறகே நிலைமை மெல்லச் சீராக தொடங்கியது. கடந்த இரு நாட்களாக விமானச் சேவை மெல்ல நார்மலாகி வருகிறது. தடை செய்யப்பட்ட விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் இயக்கப்பட்டு வருவதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7வது நாளாகக் குழப்பம்
நிலைமை ஓரளவுக்குச் சீரானாலும் கூட இண்டிகோ சேவை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இன்னுமே பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை இன்று மொத்தம் 71 இண்டிகோ விமானச் சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவிருந்த 33 விமானங்கள், அதேபோல சென்னையில் இருந்து புறப்பட இருந்த 38 விமானங்கள் என மொத்தம் 71 விமானச் சேவை ரத்து செய்யப்படுகிறது. கொழும்பு, பாங்காக், டாக்கா விமானங்கள் இயக்கப்பட ஆரம்பித்துள்ளது. சென்னையில் இருந்து அதிகம் இயக்கப்படும் ரூட்களில் ஒன்றான ஹைதராபாத்திற்கு இன்று இரு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது.
இண்டிகோ
முன்னதாக இண்டிகோவில் புக் செய்த அனைவருக்கும் உடனடியாக டிக்கெட் கட்டணத்தை எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் திரும்பத் தர வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இண்டிகோ நிறுவனம் இதுவரை ரூ.610 கோடி திரும்பத் தரப்பட்டுள்ளது. அப்படி இல்லை என்றால் தங்கள் பிளான் பி திட்டத்தின் கீழ் வேறு நாட்களில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications