சில நொடிகளுக்கு முன்பாக என்ஜின் கோளாறு.. சென்னையில் எமர்ஜென்சி! அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!
சென்னை: கொல்கத்தாவில் இருந்து நேற்று நள்ளிரவில் சென்னை விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம் தரையிறங்குவதற்கு சில சில விநாடிகள் முன்பாக என்ஜினில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-723 புறப்பட்டு வழக்கமாக இரவு 11:30 மணிக்கு சென்னை வந்தடையும். அந்த வகையில் நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இரவு 11.30 மணியளவில், சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தது.

அந்த விமானத்தில் 224 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்பட 229 பேர் இருந்தனர். இந்நிலையில் அந்த விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்த போது, விமானத்தின் இடது பக்க இயந்திரத்தில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறிய அளவில் எண்ணெய் கசிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உடனே உணர்ந்து, உடனடியாக அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
அவசர நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலையத்தில் உடனடியாக 'முழு அவசரநிலை'யை பிரகடனப்படுத்தப்படுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வண்டிகள், மருத்துவ குழுவினர் உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன.
சவாலான சூழ்நிலையிலும் திறமையாகச் செயல்பட்ட பைலட், இரவு 11:37 மணிக்கு விமானத்தை ஓடுபாதை 25-ல் வெற்றிகரமாகத் தரையிறக்கினார். விமானத்தில் இருந்த 224 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, நிலைமை சீரானதை அடுத்து இரவு 11:47 மணிக்கு எமர்ஜென்சி திரும்பப் பெறப்பட்டது.
பைலட்டின் சாதுர்யம் மற்றும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளின் துரிதமான ஏற்பாடுகளால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ஜின் கோளாறுக்கான காரணத்தைக் கண்டறிய தற்போது உயர்மட்ட விசாரணை தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
