Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதவியை பறிக்கும் அளவிற்கு மஹூவா மொய்த்ரா செய்த குற்றம் என்ன? சதி வலை பின்னல்! -இனிகோ இருதயராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறிக்கும் அளவுக்கு அவர் செய்த குற்றம் என்ன என வினவியுள்ள கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்களாட்சி தத்துவத்தை மரத்தடி பஞ்சாயத்து காலத்திற்கு மறுபடியும் கொண்டு செல்வதாக விமர்சித்துள்ளார்.

மஹூவா மொய்த்ரா பதவி பறிப்பு குறித்து இனிகோ இருதயராஜ் விடுத்துள்ள பதிவு வருமாறு;

Inigo Irudayaraj questioned, What crime did Mahua Moitra commit to take away the post?

பஞ்சாயத்து தீர்ப்புக்கு எதிராக ஒருவர் பேசி விட்டால், அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதும், அவர் யாரோடும் பேசக்கூடாது என வாய்ப்பூட்டு போடுவதும் முந்தைய மரத்தடி பஞ்சாயத்துகளின் கட்டுப்பாடுகளாக இருந்தன. அதே போன்று தான் நமது மக்களாட்சி தத்துவத்தை மரத்தடி பஞ்சாயத்து காலத்திற்கு மறுபடியும் கட்டி இழுத்துக் கொண்டு செல்லும் வகையில்,திரினாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறித்து, அவரை நாடாளுமன்றத்தை விட்டு "விலக்கி" வைத்து, நாட்டாண்மை ரேஞ்சுக்கு வெற்றிக்களிப்பில் துப்பி கொண்டிருக்கிறது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு.

பதவி பறிக்கும் அளவிற்கு மஹூவா மொய்த்ரா அப்படி செய்த குற்றம் தான் என்ன?

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற புயல் என்றும், ஆளும் பாஜகவுக்கு எதிரான ஏவுகணை என்றும் வர்ணிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்திருக்கிறது மோடியின் பாஜக அரசு.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தான் மஹுவா மொய்த்தரா. அதற்கு முன்பு அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவமிக்க அவர் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மிக நேர்த்தியாக பதில் அளிக்கும் திறமை பெற்று இருந்ததால் அதை பார்த்து வியந்த மம்தா பானர்ஜி, நாடாளுமன்றத்தில் மோடி வகையறாக்களை போட்டு தாக்குவதற்கான ஒரு ஏவுகணையாக இவரை தயார் படுத்தினார்.

மம்தாவின் எண்ணப்படியே நாடாளுமன்றத்தில் அதிரடியாகவும், சரவெடியாகவும் செயல்பட்ட மொய்த்ரா, பிரதமர் மோடி தொடங்கி அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், அமித்ஷா என பலரையும் தனது அதிரடி பேச்சால் தோலுரித்து தொங்க விட்டார். பிரதமர் மோடியின் கல்வித் தகுதி என்ன என நேருக்கு நேர் அவர் முகம் பார்த்து கேள்வி கேட்டார். அதானியும், அம்பானியும் பாஜகவின் செல்லப் பிள்ளைகளா? அவர்களுக்கு ஏன் அத்தனை சலுகைகள்? எல்.ஐ. சி போன்ற நாட்டின் பொது சொத்துக்களை அதானியிடம் அடகு வைப்பது ஏன்? என்றெல்லாம் கேள்விக்கணைகளால் துளைத்தார் மொய்த்ரா.

இதனால் ஒவ்வொரு நாடாளுமன்ற நிகழ்வின் போதும் மொய்த்ரா பேச வரும்போது மோடி உட்பட பலரும் கலக்கத்தில் இருப்பார்கள். அச்சம் அவர்களை ஆட்கொள்ளும். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நாள் முதல் இதுவரை மொய்த்ரா எழுப்பிய 61 கேள்விகளில், 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. அதனை ஆளும் பாஜக அரசு உன்னிப்பாக கவனித்தது. அதையே பொறியாக வைத்து மொய்த்ராவை மொத்தமாக தூக்குவதற்கு திட்டங்களை தீட்டியது. அதன் விளைவுதானோ என்னவோ இன்று தனது எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலைக்கு ஆளாகி இருக்கிறார் மொய்த்ரா.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்விகளை எழுப்ப பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஹிரா நந்தாணி என்பவரிடமிருந்து மொய்த்ரா பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இதை எதிர்பார்த்து காத்திருந்த பாஜக அரசு சற்றும் தாமதிக்காமல் நாடாளுமன்ற நெறிமுறை குழுவை அமைத்து மொய்த்ராவை நெருக்கியது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரும்பான்மையாக கொண்ட அந்தக் குழு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.

தன் மீதான புகார்களை மறுத்து மொய்த்ரா தெரிவித்த எந்த கருத்துக்களையும் அக்குழு ஏற்கவில்லை. (இதற்கிடையில் பிரச்சனைக்குரிய ஹிரா நந்தானியும் இணையதளம் வாயிலாக மொய்த்ரா தன்னிடம் தொடர்பில் இருந்ததாக கூறினார். அவர் உண்மையிலேயே அதானிக்கு எதிரானவராக இருந்தால் இந்த நேரத்தில் இப்படி சொல்ல வேண்டிய அவசியம் எதற்கு? மொய்த்ராவுக்கு எதிராக சதி வலை பின்னப்பட்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.)

முடிவில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நெறிமுறை குழு எனது அறிக்கையை வெளியிட்டதோடு மொய்த்ராவின் பதவியைப் பறிக்கவும் பரிந்துரைத்தது. இந்த அறிக்கை தான் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 500 பக்கங்களை கொண்ட அறிக்கையாக இருந்த போதிலும் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்க 30 நிமிடமே அவகாசம் வழங்கப்பட்டது. அதேநேரம் மஹூவா வுக்கு பேச அனுமதி அளிக்கப்படவில்லை. சுமார் 30 நிமிட விவாதத்திற்கு பிறகு மொய்த்ராவின் எம்.பி பதவியை பறிப்பது தொடர்பான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஆளும் கட்சி பெரும்பான்மை யுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது,தாங்கள் நினைத்ததை சாதித்து விட்ட உற்சாகத்தில் பாஜக கூடாரமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது.

களத்தில் தன்னை எதிர்த்து மோதுபவனுக்கும் ஆயுதம் கொடுத்து சண்டையிடுபவனே உண்மையான வீரன். ஆனால் இங்கேயோ வாய்ப்பு எனும் ஆயுதத்தை வழங்காததோடு மட்டுமின்றி பதவி என்ற உறுப்பையும் ஒடித்துப் போட்டு ஒரு வீராங்கனையை ஊனமாக்கி கொக்கரித்து இருக்கிறது ஆளும் பாஜக அரசு.

எம்.பி பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு நெறிமுறைகள் குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்திருக்கும் மொய்த்ரா, எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். தன்னைப்பேச விடாமல் செய்வதன் மூலம் அதானி விவகாரத்தை திசை திருப்பி விடலாம் என மோடி அரசு நினைப்பதாகவும் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகளை நசுக்கும் ஆயுதமாக நெறிமுறைக்குழு மாறி இருக்கிறது என்றும் கொந்தளித்து இருக்கிறார். இதன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசின் முடிவு தொடங்கி விட்டதாகவும் இன்னும் அடுத்த 30 ஆண்டு காலத்திற்கு பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்துக் கொண்டே இருப்பேன் என்றும் ஆவேசமாக கூறியிருக்கிறார் மொய்த்ரா.

இதே போன்று தான் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி விவகாரத்திலும் மோடியை விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு நீதி வழங்கியது. அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் காலடி வைத்த போது ஒட்டுமொத்த பாஜக கூடாரமே வெட்கி தலை குனிந்தது. மொய்த்ராவின் எம்பி பதவி அராஜகமாக பறிக்கப்பட்டு இருப்பதால் அவரது விவகாரத்திலும் அதுதான் நடக்கப் போகிறது. ஆகவே ஆளும் பாஜக அரசுக்கு காத்திருக்கிறது இன்னொரு தலைக்குனிவு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+