கொரோனா உடலில் புகுந்த அந்த நொடி.. 21 நாட்கள் என்னவெல்லாம் நடந்தது?.. மீண்டு வந்தவரின் கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 21 நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடும் சிரமங்களுக்கு பின் நான் கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி என்று குட்டி ஸ்டோரி! கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது, எப்படி மீண்டு வந்தேன், எப்படி இருந்தது என்னுடைய அனுபவம் இதோ!

ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம்.. திடீர் தொண்டை வலியில் இருந்துதான் என்னுடைய கொரோனா பயணம் தொடங்கியது. தண்ணீர் குடிக்கும் போது லேசான தொண்டை வலி ஏற்பட்டது. தண்ணீர் மாற்றி குடிக்கவில்லை, ஐஸ் கிரீம் சாப்பிடவில்லை, உடல் சூடும் ஏறவில்லை. ஆனாலும் லேசான தொண்டை வலி இருந்தது.

தினமும் அலுவலகம் செல்வது, பெங்களூரில் அலுவலகம் முடிந்து வெளியே நண்பர்களுடன் டீ குடிக்க, சாப்பிட செல்வது என்று பல காரணங்களுக்காக வெளியே சென்று வந்திருக்கிறேன். எல்லா முறையும் தவறாமல் மாஸ்க் மாட்டி இருந்தும், முடிந்த அளவு சமூக இடைவெளிவிட்டும் கூட எனக்கு கொரோனா தாக்கியது.

விடுதி

விடுதி

பெங்களூரில் நான் தங்கி இருந்த விடுதியில் சிலருக்கு கொரோனா வந்ததுமே அலுவலகம் செல்வதை நிறுத்திவிட்டு, என்னையும் தனிமைபடுத்திக்கொண்டேன். அப்போதே எனக்கும் கொரோனா வரும் என்ற சந்தேகம் இருந்தது. தனிமைப்படுத்தி ஒரு வாரம் கழித்துதான் அந்த தொண்டை வலி ஏற்பட்டது. அதே இரவு கடுமையான தலைவலி, உடல் வலி. இதுவரை அப்படி ஒரு வலி ஏற்பட்டதே இல்லை. காலை கூட நகர்த்த முடியாத அளவிற்கு இறுக்கமாக கட்டிப்போட்டது போல வலி பின்னியது.

வலி

வலி

அந்த நொடி.. என்னால் எதோ உடலில் இருப்பதை உணர முடிந்தது. உடலுக்கு தொடர்பில்லாத விஷயம் உடலில் இருப்பதை உணர முடிந்தது. இருந்தாலும் கொரோனாவாக இருக்க கூடாது என்று நம்பிக்கையோடு, டோலோவை சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன். மறுநாள் எழுந்தால், பெட்டை விட்டு நகர முடியாத அளவிற்கு கடும் வலி, குளிர் காய்ச்சல். உடனே அன்று காலையே அருகிலேயே இருந்த மருத்துவரை பார்க்க சென்றுவிட்டேன்.

சோதனை

சோதனை

உடலை சோதனை செய்த மருத்துவர்.. உங்களுக்கு இருப்பது கொரோனா அறிகுறிதான் என்றார். 3 நாட்கள் இதே அறிகுறி இருந்தால் டெஸ்ட் எடுக்கலாம். இப்போது இதை சாப்பிடுங்கள் என்று சில மருந்துகளை எழுதிக்கொடுத்தார். அன்றைய இரவு எனக்கு நரகம் என்றுதான் சொல்ல வேண்டும். அன்று மாலையே வாசனை இல்லாமல் போய்விட்டது. மூக்கு அடைக்கவில்லை, ஆனால் மூக்கு வழியாக சுவாசிப்பது கஷ்டமாக இருந்தது.

தொண்டை

தொண்டை

தொண்டையில், வாடகை வாங்காமல் 2 குடும்பங்கள் குடித்தனம் வெயிட்டாக நடத்துவது போல இருந்தது. அன்று இரவு சாப்பாடு ஆர்டர் செய்து, தனி அறையில் சாப்பிட்ட போது.. இட்லி காய்ந்து போன ரப்பரின் சுவையில் இருந்தது. அப்போதுதான் உறுதியானது எனக்கு கொரோனா என்று. உடனே என்னை சந்தித்த எல்லோருக்கும் போன் செய்து தனிமைப்படுத்திக்கொள்ள சொன்னேன். இரவு முழுக்க தூங்க முடியாமல் கஷ்டப்பட்டேன். கடும் உடல்வலி, விட்டு விட்டு காய்ச்சல். மூன்று நாட்கள் காத்திருக்காமல், மறுநாளே பெங்களூர் மாநகராட்சியில் டெஸ்ட் எடுக்க சென்றேன்.

டெஸ்ட்

டெஸ்ட்

பெங்களூரில் டெஸ்ட் எடுத்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன்.. காத்திருந்தேன்.. காத்துக்கொண்டே இருந்தேன். டெஸ்ட் கொடுத்து 4 நாட்கள் ஆகியும் ரிசல்ட் வரவில்லை. பெங்களூரின் நிலை அப்போது மிக மோசம். யாருக்கும் பெட் கிடைக்கவில்லை. வேறு என்ன செய்வது, தனியாக மீண்டும் டெஸ்டிங் சென்டர் சென்று விசாரித்தேன்.. அசால்ட்டாக உங்களுக்கு கொரோனா என்று சொல்லிவிட்டார்கள். பாசிட்டிவ் என்று ஒரு மெசேஜ் கூட வரவில்லை, நானே போய் கேட்ட பின்தான் சொன்னார்கள். என்ன செய்ய வேண்டும், சிகிச்சை எப்படி என்று எதுவும் சொல்லவில்லை.

சென்னை

சென்னை

சரி என்று குழப்பத்தோடு பெங்களூரில் ஏற்கனவே பார்த்த மருத்துவரிடம் அணுகி, கொரோனா மருந்துகளை பெற்றுக்கொண்டு, ஆக்சிமீட்டரும் வாங்கிக்கொண்டு, மருத்துவரின் ஆலோசனை பெற்று, தனி கார் ஏற்பாடு செய்து சென்னைக்கு சென்றுவிட்டேன். பெங்களூரில் பெட் இல்லை, கொரோனாவோடு 21 நாட்கள் தனிமைப்படுத்தவும் போதிய சூழ்நிலை இல்லை. இதனால் சென்னைக்கு சென்று, மாநகராட்சி அனுமதியோடு, தனி பிளாட்டில் ஹோம் சிகிச்சைக்கு அனுமதி வாங்கி தங்கிவிட்டேன். தாவுடா தாவு என்று கொரோனா எபிசென்டர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தேன். உடல்நிலை மோசமாக இல்லை என்பதால் ஹோம் சிகிச்சைக்கு அனுமதி கொடுத்தனர்.. தினமும் காலையில் வந்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 உடல் வலி

உடல் வலி

உடல் வலி, பயண களைப்பு என்று கொரோனா போட்டு வாட்டியது. இருமல் இல்லை என்றாலும் சுத்தமாக டேஸ்ட் தெரியவில்லை. மூச்சு விடவே முடியவில்லை. உட்கார்ந்தாலும் மூச்சு வாங்கும், நின்றாலும் மூச்சு வாங்கும், படுத்தாலும் மூச்சு வாங்கும். ஆக்சி மீட்டரில் சோதனை செய்தால் ஆக்சிஜன் நார்மலாக இருக்கும். ஆனால் இதயம் மட்டும் லப்டப் என்று துடிப்பதற்கு பதிலாக "லப்டப்லப்டப்லப்டப்" என்று வேகமாக துடிக்கும். சாவு பயத்தை காட்டிட்டான் பரமா என்று சொல்லும் அளவிற்கு அச்சம். என்ன ஆகுமோ.. என்ற பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.

சிக்கன்

சிக்கன்

நல்ல புரோட்டின் உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொன்னதால் சிக்கன், மட்டன், முட்டை என்று சாப்பிட்டாலும், எதுவும் டேஸ்ட் இல்லை. எல்லாமே ரப்பரை ஊறவைத்து, நான்கு நாட்கள் கழித்து சாப்பிட்டது போலத்தான் இருந்தது. கொரோனா எனக்கு மிக மோசமான ஒன்றாக இல்லாமல், மூச்சு விடுவதில் மட்டுமே சிரமம் இருந்தது. இதற்கு முன் உடல் ரீதியான நோய் எதுவும் இல்லாத காரணத்தால், வேறு எந்த பிரச்சனையும் பெரிதாக இல்லை.

மூச்சு

மூச்சு

ஆனால் ஒவ்வோர் முறையும் இதயம் உசைன் போல்ட் வேகத்தில் துடிக்கும் போது பதற்றம் இருந்தது. டிவிட்டர், பேஸ்புக் என்று கொரோனா இறப்பு செய்திகளை பார்ப்பதை குறைத்துக்கொண்டு, ராஜா, ரகுமான் என்று யூடியூப் பக்கம் தஞ்சம் அடைந்து கவனத்தை முடிந்த அளவு திசை திருப்பினேன். உடலில் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளை வைத்து, அதற்கு ஏற்றபடி மருந்துகளை மருத்துவர் மூலம் பெற்று கவனமாக சிகிச்சை பெற்றேன்.

கவனம்

கவனம்

பாசிட்டிவ் வந்து 10 நாட்கள் கழித்து உடல் கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருந்தது. உடல் கொஞ்சம் வலுவாக இருந்தது. டேஸ்ட் வரவில்லை, இதயம் அவ்வப்போது வேகமாக துடித்தாலும் கூட, உடல் சரியானது போல உணர்ந்தேன். தொடர்ந்து 4 வேளை உணவு, மருந்து மாத்திரை என்று சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தேன். சரியாகி 17 நாட்கள் கழித்து மூச்சு விடுவதில் சிரமம் கொஞ்சம் லேசாக சரியானது. உடல் கொஞ்சம் தேறினாலும் தனியாக இருந்தது மனரீதியாக அழுத்தத்தை கொடுத்தது.

நெகட்டிவ்

நெகட்டிவ்

25 நாட்கள் கழித்து பிளாட்டிலேயே மீண்டும் கொரோனா சோதனை செய்தேன். நெகட்டிவ் என்று வந்தது. அப்போதுதான் உண்மையில் "பாசிடிவ்வாக" உணர்ந்தேன். உடல் புத்துணர்ச்சியோடு இருந்தது. சரியான நேரத்தில் கொரோனா இருப்பதை கண்டுபிடித்தது, விடாமல் மருந்து மாத்திரை எடுத்து, சாப்பாடும் சரியாக சாப்பிட்டது கொரோனாவை வெல்ல உதவியாக இருந்தது.

சில நாட்கள்

சில நாட்கள்

ஆனால் கொரோனா சென்றும் சில நாட்கள் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. திடீர் திடீரென படபடப்பு ஏற்பட்டது. ஆனா இப்போது எல்லாம் குணமாகி மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டேன். 21 நாட்கள் கொரோனாவோடு கழித்த அனுபவம் காஞ்சனா வந்துவிட்டு போன லாரன்ஸ் உடம்பு போல கொடூரமாக இருந்தது.. இப்போது உடல் முழு நலத்துடன் இருக்கிறது. தப்பிச்சிட்டடா.. என்று என்னை நானே கண்ணாடியில் பார்த்து பாராட்டிக்கொண்டேன்!

நீங்களும் இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தவரா? உங்களின் கதையை கேட்க நாங்கள் தயார்.. கொரோனாவில் இருந்து நீங்கள் மீண்ட கதையை இந்த [email protected] மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்! உங்கள் கதையை தமிழிலும் டைப் செய்தும் , புகைப்படத்தோடும் அனுப்பலாம்! இல்லையென்றால் கமெண்ட் பாக்சில் கூட உங்கள் கதையை சொல்லலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+