உளவுத்துறை விஜய் கிட்ட சொன்ன விஷயம்! 5 தொகுதிகளில் இப்பவே தேர்தல் ஏன்? அப்ப நவம்பர் 13ல் தவெக ஆட்சி?
சென்னை: தமிழகத்தில் காலியாக கிடக்கும் 5 தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பு வலியுறுத்தி வருகிறது.. நவம்பர் மாதத்துக்கு முன்பே இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் விஜய் தரப்பு தீவிரமாக இருப்பதாக தகவல் உள்ளது.. இதற்கு பின்னால் இடைத்தேர்தலை தாண்டிய ஒரு முக்கிய அரசியல் கணக்கு இருப்பதாகவும் தெரிகிறது.. அதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே வருகிற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 5 தொகுதிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு எதிராக வழக்குகள் இருப்பதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இந்த வழக்கில் முடிவு அறிவிக்கப்படும் வரையில் இடைத்தேர்தல் நடத்தமுடியாது. அதனால் அந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

7 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு தேர்தல்
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை எதிர்த்து முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தொகுதிகளை காலியாக வைத்திருப்பது மக்கள் பிரதிநிதித்துவத்தின் கோட்பாடுகளை தகர்ப்பதாக இருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்கிற ரீதியில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், "தொகுதி காலியாக இருந்தால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதனால் நவம்பர் 24-ந்தேதி வரை இடைத்தேர்தல் நடத்த கால அவகாசம் இருக்கிறது. தேர்தல் வழக்குகள் இருந்தால், அதனையும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
முதல்வர் மனு தாக்கல்
இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் முடிவு சொன்ன பிறகு 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனால், முதல்வர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் 5 தொகுதிகளுக்கும் ஏன் உடனடியாக தேர்தல் நடத்த முதல்வர் தரப்பில் ஆர்வம் காட்டப்படுகிறது என்பது குறித்து ஒரு புதுத் தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது.
அதாவது, "தமிழக முதல்வராக மே 10-ந்தேதி பொறுப்பேற்றுக்கொண்டார் ஜோசப் விஜய். மே 13-ம் தேதி சட்டமன்றத்தில் தனது அரசுக்கு மெஜாரிட்டி இருப்பதையும் நிரூபித்தார். விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டுமானால் 6 மாதம் காத்திருக்க வேண்டும்.
நவம்பர் 13-ம் தேதியோடு கெடு முடிவு
குறிப்பாக, விஜய் அரசின் மீது நம்பிக்கை இல்லை என தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமானால் 6 மாத காலம் கழித்தே சட்ட மன்றத்தில் கொண்டுவர முடியும். அந்த 6 மாத கால அவகாசம் நவம்பர் 13-ம் தேதியோடு முடிகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டமன்றம் கூட வேண்டும் என்பதால், நவம்பரில் சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும்.
அப்போது, விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த முறை சட்டமன்ற உறுப்பினர்களை, பிளாக் வாரியாக பிரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக வாக்கெடுப்பு நடத்தாமல் வாக்கு சீட்டு முறைப்படி வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரை வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
திமுக, அதிமுக அதிரடி
இதற்கு காரணம், திமுக பிடியில் கணிசமான தவெக எம்.எல்.ஏ.க்களும், அதிமுக பிடியில் கணிசமான எண்ணிக்கையில் தவெக எம்.எம்.ஏ.க்களும் சிக்கியிருக்கிறார்கள். இதற்கு சில பல காரணங்கள் இருக்கின்றன...
அதனால், நவம்பரில் கூடும் சட்டமன்றத்தில், விஜய் ஆட்சிக்கான பெரும்பான்மை பலம் இல்லை என்பதை திமுக மற்றும் அதிமுக பிடியில் சிக்கியுள்ள தவெக எம்.எல்.ஏ. க்களை வாக்களிக்க வைக்க திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டுள்ளன. இதனை முதல்வர் விஜய்க்கு உளவுத்துறை மட்டுமல்ல வேறு சில சோர்ஸ்கள் மூலமும் சொல்லப்பட்டுள்ளதாம்.
உளவுத்துறை தந்த தகவல்
அதனால், திமுக, அதிமுக தலைமையிடம் தொடர்புள்ள தவெக எம்.எல்.ஏ.க்களை கண்காணி த்து வருகிறது உளவுத்துறை. ஏற்கனவே, தவெக அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகள் மீது முதல்வர் விஜய்க்கு சில மன வருத்தம் இருக்கிறது. இத்தகைய புறக்காரணங்களால்தான், காலியாக உள்ள தொகுதிகளுக்கு நவம்பர் மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் நடத்தப்பட்டு அதில் ஜெயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் விஜய்..
இதன் மூலம் மக்கள் செல்வாக்கு தம் பக்கம் இருப்பதை தவெகவினருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் உணர்த்த வேண்டும் என்றும், அதன் மூலம் எதிர்க்கட்சிகளை நம்பி தவெகவினர் சோரம் போகமாட்டார்கள் என்றும் திட்டமிட்டே காலியாக உள்ள தொகுதிகளுக்கு சீக்கிரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அவர் கோரிக்கை வைத்ததன் பின்னணி" என்று விபரமறிந்த வட்டாரங்களிலிருந்து நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.
ஆக, இப்போது நடக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம் வெறும் தேர்தல் தேதிக்கான போராட்டம் மட்டுமல்ல.. நவம்பர் மாத அரசியல் நகர்வுகளுக்கும் முன்பாக போடப்படும் ஒரு முக்கிய காயாகவே பார்க்கப்படுகிறது..!!
- நமது சிறப்பு நிருபர் எழில்




Click it and Unblock the Notifications
