5,300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் நிலத்தில் இரும்பின் பயன்பாடு- இரும்புக் காலம் என்பது என்ன?
சென்னை: மனித குலத்தின் வளர்ச்சி பல்வேறு படிநிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. பழைய கற்காலம், புதிய கற்காலம், செம்பு கற்காலம், இரும்பு காலம் இப்படித்தான் மனித குல வளர்ச்சி பிரிக்கப்படுகின்றன. அதாவது கற்களையே வாழ்வியல் பொருளாகப் பயன்படுத்திய மனிதர்கள் பின்னர் களி மண்ணை பயன்படுத்தத் தொடங்கினர்; இதனைத் தொடர்ந்து செம்பு- தாமிரத்தை பயன்படுத்த தொடங்கினர்; ஆனால் செம்பு என்பது அவ்வளவு உறுதியானது அல்ல என்பதால் அடுத்ததாக இரும்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். இப்படித்தான் மனிதகுலத்தின் நாகரீக வளர்ச்சி பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
அதாவது பழங்கால மனிதர்கள், நிலங்களை செழுமைப்படுத்தி வேளாண் தொழிலைத் தொடங்குவதற்கு தொடக்கத்தில் செம்பிலான பொருட்களை பயன்படுத்தி வந்தனர்; ஆனால் இது பெரிய அளவு உதவி செய்யவில்லை. இதனால் செம்புக்கு அடுத்ததாக ஒரு உலோகத்தை அறியவேண்டிய உந்துதல் மனித குலத்துக்கு தேவையாக இருந்தது.

இப்படி செம்புக்கு அடுத்ததாக இரும்பை பிரித்து, உருக்கி அதனில் இருந்து உலோகங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்துக்கு மனிதகுலத்தின் வளர்ச்சி நகர்ந்தது. அப்படியான மனித குலத்தின் முதல் இரும்புப் பயன்பாடு என்பது நம்முடைய தமிழர் நிலத்தில் இருந்தது; அதுவும் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்பதாக இதுவரையிலான அறிவியல் ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஈமச்சின்னங்கள் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடத்தப்பட்டபோதுதான் பல இரும்புப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த இரும்புப் பொருட்களின் காலத்தை அறிவதற்ற்காக கரிம (கார்பன்) பகுப்பாய்வு முறைக்காக அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் பீட்டா ஆய்வுக் கூட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வுகள்தான் முதன் முதலில் தமிழ்நாட்டின் இரும்பின் பயன்பாடு 4,500 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது என்பதை உறுதி செய்தது. இதனை 2022-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தியாவின் பிற பகுதிகளில் உத்தாரணமாக ராஜஸ்தான், கர்நாடகா பகுதிகளில் இரும்பின் பயன்பாடு என்பது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது மட்டும் என்பதுதான் அறிவியல் ஆய்வுகளாக இருந்தும் வந்தன.
தற்போதை புதிய கரிம பகுப்பாய்வுகளின் அடிப்படையில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை பிரித்தெடுக்கும்- இரும்பை உருக்கும் அறிவை தமிழர் பெற்றிருந்தனர்; தமிழர் நிலப்பரப்பில் இருந்துதான் உலகளாவிய இரும்பின் காலம் தொடங்கியது என்கிற பிரகடனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். மனித குலத்தின் முதல் மொழியே தமிழ் மொழி என்பதில் தொடங்கி மனித குலத்தின் ஒவ்வொரு நாகரீக வளர்ச்சியும் தமிழராலேயே நிகழ்ந்திருக்கிறது என்பதை பறைசாற்றும் வகையில் உலகளாவிய இரும்பின் காலம் தமிழர் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கியது என்பதையே முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய பிரகடனம் வெளிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications