Murugan Maanaadu| மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளாரா? உண்மை என்ன?
சென்னை: மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை (ஞாயிறு) முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள விருப்பதாக காலை முதலே சமூக ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த தகவலை உண்மை என்று பலரும் நம்பும் நிலையில், அதுபற்றி ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை (ஞாயிறு) முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு அறுபடை வீடுகளின் மாதிரி அரங்குகளை அந்த திடலில் அமைக்கப்பட்டு உள்ளன. அறுபடை வீடுகளின் மாதிரி அரங்குகள் அமைக்கும பணி தற்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த மாநாடு நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துதான் அனுமதி அளித்துள்ளது.

ஆன்மிக மாநாட்டில் அரசியல் கலக்கும் நோக்கத்தில் செயல்படக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றை காவல்துறையினரிடம் வழங்கி, அவர்கள் பதிவு செய்த பிறகு உள்ளே அனுமதிக்கலாம் என்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உத்தரப்பிரதச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மதுரைக்கு வந்திருந்தார்.
அப்போது மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைக்கிறது என்று குற்றம்சாட்டினார். மேலும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கூறினார்..
'முருக பக்தர்கள் மாநாடு' என்ற பெயரில் இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக பாஜக எல்.முருகன் மாநில தலைவராக இருந்த காலத்தில் வேல் யாத்திரை நடத்தியது. அதே பாணியில் தற்போது முருகன் மாநாடு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை (ஜூன் 22ஆம் தேதி) மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் சமூக ஊடங்களில் வெளியாகி இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் முருகன் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் என்று உலாவரும் செய்தி பொய்யானது . ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்ள போவதில்லை என்று அவரது செய்தி தொடர்பாளரும் பிரபல சினிமா பிஆர்ஓவுமான ரியாஸ் அகமது விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications