அப்போ இந்த 15 தொகுதிகளிலும் அவுட்டா? அதிமுக சேனலே ஒப்புக்கொண்ட கணிப்பு! ஷாக் ஆன ர.ரக்கள்!
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலான நியூஸ் ஜெ 24 இடங்களில் அதிமுக வெல்லும் என கணித்துள்ளது. அதிமுக சேனலே 15 இடங்களில் அதிமுக கூட்டணி தோல்வியடையும் என ஒப்புதல் அளித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு, ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிளில் திமுக பெரும்பான்மை இடங்களை வெல்லும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியா டுடே, சி.என்.என்., நியூஸ் 18, ஏ.பி.பி - சி வோட்டர் ஆகிய ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கணிப்பில் திமுக 35 க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவுக்கு 1 - 3 இடங்கள் கிடைக்கும் எனவும் அதிமுகவுக்கு 0 - 2 இடங்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் திமுக கூட்டணி 35+ இடங்களிலும், பாஜக கூட்டணி ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், அதிமுக வாஷ் அவுட் கூட ஆகலாம் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக 1 இடத்தில் வென்ற நிலையில், அதுவும் பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகமான நியூஸ் ஜெ தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. நியூஸ் ஜெ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் 24 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை, விருதுநகர், தென்காசி, தென்சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர், சிதம்பரம், கடலூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி ஆகிய 24 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்று நியூஸ் ஜே கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அதிமுக தமிழ்நாட்டில் 32 இடங்களில் நேரடியாகப் போட்டியிட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக 5 இடங்களிலும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியிலும், எஸ்டிபிஐ நெல்லை முபாரக் - திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அதிமுக வெற்றி பெறும் தொகுதிகள் என 24 தொகுதிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளது நியூஸ் ஜெ சேனல்.
அப்படி என்றால் தமிழ்நாட்டில் மீதம் உள்ள 15 இடங்களில் திமுக, பாஜக கூட்டணிகள் வெல்வதாக நியூஸ் ஜெ ஒப்புக்கொண்டுள்ளதா என விமர்சனங்கள் எழுந்துள்ளன. கீழ்க்கண்ட 15 தொகுதிகள் தான் அதிமுக வெற்றி பெறும் என நியூஸ் ஜெ அறிவிக்காத தொகுதிகள் ஆகும்.
வட சென்னை - ராயபுரம் மனோ
தேனி - நாராயணசாமி
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலியபெருமாள்
பெரம்பலூர் - சந்திரமோகன்
திருநெல்வேலி - ஜான்சி ராணி
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
திருப்பூர் - அருணாசலம்
நீலகிரி - லோகேஷ் தமிழ்ச்செல்வன்
கன்னியாகுமரி - பசிலியான் நசரேத்
திண்டுக்கல் - நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ)
திருவள்ளூர் (தனி) - நல்லதம்பி (தேமுதிக)
மத்திய சென்னை - பார்த்தசாரதி (தேமுதிக)
தஞ்சாவூர் - சிவநேசன் (தேமுதிக)












Click it and Unblock the Notifications