அண்ணாமலை நீக்கம்.. அதிமுக அழுத்தம் காரணமா? யோசிக்காமல் ஒரே வரியில் நயினார் நாகேந்திரன் தந்த பதில்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு இப்போது தேசிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அழுத்தம் காரணமாகவே அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகக் கடந்த 4 ஆண்டுகள் இருந்தவர் அண்ணாமலை.. அவர் மாநிலத் தலைவராக இருந்தபோது பாஜகவை வளர்த்தெடுக்க வேல் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

அண்ணாமலை
இதற்கிடையே கடந்த வாரம் அவர் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தனர். இதன் காரணமாகவே நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்யும் வரை எடப்பாடி பழனிசாமி கூட்டணி சந்திப்பை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன்
இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அண்ணாமலையை யாரும் வெளியேற்ற முடியாது. அண்ணாமலை பாஜகவின் மிகப் பெரிய சொத்து. தமிழக பாஜகவில் இருந்து அண்ணாமலை யாரும் வெளியேற்ற முடியாது.
அரசியலில் பல மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும். சில கட்சிகள் ஒரு தேர்தலில் ஒரு கூட்டணியை வைப்பார்கள். அடுத்த தேர்தலில் கூட்டணியை மாற்றி வைப்பார்கள். அது வேறு.. ஆனால், அரசியலை நாகரீகமான முறையில் செய்ய வேண்டும் என்பதை எனது நிலைப்பாடு.
அதிமுக
உள் துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, நேரடியாக எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குத் தான் நேரில் சென்றார். இரவு டின்னரை கூட சாப்பிட்டார். அதன் பிறகே அங்கிருந்து கிளம்பினார். எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி, உதயகுமார், வேலுமணி ஆகியோர் கூட்டணி குறித்துப் பேசிவிட்டே சென்றனர். தேர்தல் வேலைகளில் ஈடுபடும்போது இணைந்து பணியாற்றுவோம்" என்று அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை சொல்வது என்ன!
அதேநேரம் அதிமுக உடனான கூட்டணி அமைக்கவும் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்று நெட்டிசன்கள் கூறினர். இது தொடர்பான கேள்விக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை, "இப்போது நான் ஒரு தொண்டன். எந்தவொரு பொறுப்பும் இல்லாத அடிப்படை தொண்டன். கூட்டணி என்பது கட்சித் தலைமையின் முடிவு. மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோரின் எடுத்த முடிவு. கட்சி ஒரு முடிவை எடுத்த பிறகு, தொண்டராக அதற்குக் கட்டுப்படுவோம். அதுவே கட்சியின் குணம். தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026ல் நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும்
அதிமுக, பாஜக இரண்டுமே வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள். இரு கட்சிகளுக்கும் இடையே சில கொள்கை வேறுபாடுகள் உள்ளன. இதன் காரணமாகவே காமன் மினிமம் புரோகிராம் மூலம் செயல்பட முடிவு செய்துள்ளோம். அதில் குழப்பம் இருக்காது" என்றார்.












Click it and Unblock the Notifications