இவிஎம் மிஷின் மோசடி; தொகுதிக்கு 1 லட்சம் வாக்குகள் போலி? பாஜக வெற்றியில் சந்தேகம்!
சென்னை: இவிஎம் மிஷின் மூலம் குளறுபடிகள் செய்ய முடியும் என்று மீண்டும் நாடு முழுவதும் விவாதம் எழுப்பப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் 'தேர்தல் ஆணையம் இந்த இவிஎம் மிஷின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி எதிர்க்கட்சிகளிடம் பேசக் கூடத் தயாராக இல்லை' என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால், அதே கட்சியைச் சேர்ந்த கார்த்திக் சிதம்பரம் இவிஎம் மிஷினை யாரும் ஹேக் செய்ய முடியாது. அது எந்த நெட் ஒர்க் உடனும் இணைக்கப்படவில்லை. ஆகவே அதில் யாரும் தவறு செய்ய முடியாது என்கிறார்.
ஆனால், வளர்ந்த நாடுகளே இந்த இவிஎம் மிஷின் மூலம் வாக்களிப்பதை வேண்டாம் என்று கைவிட்டு விட்டார்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.
அது மட்டும் இல்லை. அறிவியல்பூர்வமாக இந்த இவிஎம் மிஷின் மோசடி குறித்து சுப்பிரமணிய சாமியே நீதி மன்றத்தில் நிரூபித்திருக்கிறார் என்கிறார் இவர்.

"தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் 383 தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்கள் உள்ளன என்று Association for democratic reforms மற்றும் common causes சேர்ந்து போட்ட வழக்கு இப்படி இன்று வரை விசாரணைக்கு வரவில்லை.
ஏன் விசாரணைக்கு வரவில்லை. பதிவுத்துறை முடக்கி வைத்துள்ளது.
மக்களே சொல்லட்டும். பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் எப்படி ஒரு தொகுதிக்கு 1 லட்சம் வாக்குகள் வரை வித்தியாசம் வந்தது? யாரிடமாவது பதில் இருக்கிறதா? இவ்வளவு முக்கியமான வழக்கையே விசாரிக்க விடாமல் முடக்குகிறார்கள்" என்றவர் தொடர்ந்தார்.
"இந்தியா முழுவதும் இந்த இவிஎம் மிஷின் பற்றி ஒரு விழிப்புணர்வு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அது அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதில் குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் பாஜக எப்படி ஜெயித்தது என்று அம்மாநில மக்களே சந்தேகப்படும் அளவுக்கு விவகாரம் பெரிய அளவில் வெடித்தது.
ஏனென்றால், தேர்தலுக்கு முன் பாஜக இந்த மாநிலத்தில் மிகக் கடுமையான சரிவைச் சந்திக்கும் என்று தான் மக்களே நம்பினார்கள். ஆனால், அதற்கு மாறாக 163 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. காங்கிரஸ்தான் மீண்டு ஆட்சியைப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது வெறும் 67 இடங்களில் மட்டுமே வென்றது.

இது அந்த மாநில மக்கள் மத்தியில் விவாதமாக மாறி, போராட்டம் அளவுக்குப் பிரச்சினை தீவிரமானது. இப்போது மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்றால், எப்படி பாஜக வெல்கிறது? குறிப்பாகச் சொன்னால் ஹிந்தி பெல்ட் என்று பாஜக பேசி வரும் மாநிலங்களிலேயே இப்போது இ வி எம் மிஷின் மீது சந்தேகம் வலுத்து வருகிறது.
ராஜஸ்தானில் 199 தொகுதிகளில்தான் தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கவில்லை. அந்தத் தொகுதி வேட்பாளர் இறந்துவிட்டதால் நிறுத்திவைத்துவிட்டார்கள். அதற்குப் பின்னால் இப்போது சில நாட்கள் முன்னதாக தான் தேர்தல் நடந்தது. அதில் பாஜக 12 ஆயிரம் ஓட்டுகளில் தோற்றுவிட்டது. காங்கிரஸ் வென்றுவிட்டது.
மத்தியப் பிரதேசத்தை எடுத்துக் கொள்வோம். கமல்நாத் சொல்கிறார், 'எங்களுடைய வேட்பாளர்கள் பலர் அவர்களின் சொந்த கிராமங்களிலேயே 50 வாக்குகள் பெறவில்லை' என்கிறார். பொதுவாக ஒருவர் தோற்பது, வெல்வது சகஜம். ஆனால், சொந்த தொகுதியில் கட்டாயம் கணிசமான வாக்குகளை வாங்குவார்கள். ஆனால், 50 ஓட்டுகள் கூட ஒருவர் அல்ல, பலர் வாங்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?

ஒரு கிராமத்தில் 1000 வாக்குகள் இருக்கின்றன என்றால், அதில் 50 வாக்குகளைக் கூட காங்கிரஸ் வேட்பாளர்கள் வாங்கவில்லை என்றால் அதில் சந்தேகம் வருமா? வராதா?
இங்கே 2019இல் அமமுகவுக்கு அதுதான் நடந்தது. 2 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் அந்தக் கட்சிக்கு ஒரு வாக்குகள் கூட விழவில்லை. ஆனால், தமிழ்நாடு முழுவதும் அந்தக் கட்சி 22 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அதாவது 6% க்கு மேல் வாக்குகள் பெற்றிருந்தார்கள்.
1999இல் பல சாவடிகளில் எனக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை என்று முதன்முதலாக வழக்குப் போட்டவர் சுப்பிரமணிய சாமிதான். டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். அப்போது நீதிபதி கேட்டார், 'உங்கள் ஓட்டு எல்லாம் யாருக்கு விழுந்தது?' என்று கேள்வி கேட்டார். அதற்கு சாமி தெரியவில்லை என்றார்.

'நீங்கள் தேர்தல் ஆணையத்தை விசாரித்தீர்களா?' என்றார் நீதிபதி. அதற்கு சாமி, 'விசாரித்தேன். ஒன்றுமே பதில் தரவில்லை' என்றார். அப்போதே இந்த மிஷின் தவறானது என்று நீதிமன்றத்தில் அன்றே சொல்லிவிட்டார். இதை உடனே நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
வாக்குச் சீட்டு முறையில் ஓட்டு போடுவதில் யாரும் தவறு செய்ய முடியாது. ஏனென்றால், உங்களது வாக்குச்சீட்டு பெறும் போது அதற்கான சீரியல் எண் இருக்கும்.
அதில் வாக்காளர் கையெழுத்துப் போடவேண்டும். அந்த சீரியல் நம்பருடன் உங்கள் வாக்குச் சீட்டும் இணைக்கப்பட்டிருக்கும். ஆக, நீங்கள் வாக்களித்து விட்ட, நாளை ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதே எண்ணை வைத்து, சோதித்துப் பார்க்க முடியும். ஆனால், ஓட்டு மிஷின் மூலம் போடும் ஓட்டை யாரும் அப்படிச் சோதிக்க முடியாது.
ஒருவர் வாக்குச் சீட்டு மூலம் போடும் ஓட்டில் அவர் கைப்பட அவர் விரும்பும் சின்னத்தில் முத்திரை குத்தி பெட்டியில் போடலாம். ஆனால், நாம் மிஷின் மூலம் போடும் ஓட்டு நான் அழுத்திய சின்னத்தில்தான் விழுந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? அப்படி ஒன்று இல்லையே?

ஆகவேதான் இதே மாதிரியான ஒரு பிரச்சினை 2005 ஜெர்மன் தேர்தலில் நீதிமன்றத்திற்குச் சென்றது. மொத்தம் 2 நபர்கள்தான் அந்த வழக்கைப் போட்டார்கள். 'நாங்கள் வாக்களித்தோம். ஆனால், யாருக்குப் போட்டோம் என்பதற்காக ஆதாரம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதை எப்படி நம்புவது?' என்று வழக்குப் போட்டார்கள்.
நீதிபதி உடனே, தேர்தல் ஆணையத்தைக் கேட்டீர்களா? என்றார்கள். ஆம் கேட்டோம். எல்லாம் சரியாக இருக்கும் நம்பிக்கையாக போங்கள் என்று சொல்கிறார்கள் என்றார்கள் வழக்குத் தொடுத்தவர்கள்.
ஒரு வாக்காளர் ஓட்டுப் போட்டால் அதற்கான அத்தாட்சி என்ன என்று நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தைக் கேட்டது. அதற்கு ஆதாரம் இல்லை என்றது ஆணையம். அப்படி என்றால் இந்த மிஷினை பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்து நீதிமன்றம்.

உடனடியாக ஜெர்மன் நாடாளுமன்ற வரலாற்றிலிருந்து ஓட்டு எந்திரத்தைத் தூக்கிப் போடப்பட்டது. அதைத் தயாரித்துக் கொடுத்து வந்த நெதர்லாந்தும் அதைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிராகரித்து விட்டது. இந்தத் தீர்ப்பு வரும் வரை பயன்படுத்தி வந்த அயர்லாந்தும் மிஷினை பயன்படுத்த வேண்டாம் என்று தடை போட்டு விட்டது.
இந்த மிஷினை கொண்டு வரலாமா என ஒரு முயற்சியை அமெரிக்கா எடுத்தது. அதற்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டமே நடந்தது. தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய நாடு அமெரிக்கா. அடுத்து ஜப்பான். இந்த நாடுகளில் கூட வாக்குச் சீட்டுதான்.
2009 தேர்தல் வந்தது. அப்போது ஜி.வி. நரசிம்மா என்று ஒருவர் ஒரு நூல் எழுதினார். அதைப் படித்துவிட்ட அத்வானி ஒரு வழக்கைப் போட்டார். அந்த வழக்குப் போட்ட பிறகுதான் voter verifiable paper audit trail என்ற ஒரு புதிய முறையை இ வி எம் மிஷினில் இணைத்தார்கள். அதாவது யாருக்குப் போட்டோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டுடன் கூடிய விவி பேட் மிஷின் வந்தது.

2012இல் இனிமேல் விவி பேட் தான் பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2019க்குள் நாங்கள் அனைத்து சாவடிகளிலும் இதையே பயன்படுத்துவோம் என்று தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தது.
ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 20 ஆயிரம் மிஷின் தான் பயன்படுத்தப்பட்டது. 17 லட்சத்து 30 ஆயிரம் மிஷினை வாங்கி வைத்துக் கொண்டு, அதில் வெறும் 20 ஆயிரம் தான் பயன்படுத்தியது தேர்தல் ஆணையம். அந்த 20 ஆயிரம் மிஷினில் விழுந்த வாக்குகள் சரியாக உள்ளனவா என்று தேர்தல் ஆணையம் எண்ணிப் பார்த்து இருக்க வேண்டும் இல்லையா? இதுவரை எண்ணவே இல்லை.
இப்போது கேட்டால், அது தெர்மல் பிரிண்டிங் கொஞ்ச நாள் தான் இருக்கும். பிறகு தானாக அழிந்துவிடும் என்று சொல்கிறது ஆணையம். இந்த மிஷினை நம்பித்தான் இந்தியாவின் ஜனநாயகம் இருக்கிறது. இது எவ்வளவு பெரிய மோசடி?" என்கிறார்












Click it and Unblock the Notifications