கட்சியிலிருந்தே நீக்கம்? "காரை எடுங்க".. பறந்தடித்து சென்னை வரும் ஓபிஎஸ்! இரவு முழுக்க என்ன நடந்தது?
சென்னை: அதிமுகவில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று அவசர அவசரமாக சென்னைக்கு திரும்புகிறார். இதற்கான பயணத்தை அவர் தேனியில் தொடங்கி உள்ளார்.
Recommended Video
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையிலான மோதல் உச்சம் தொட்டுள்ளது. கடந்த பொதுக்குழுவில் இரண்டு தரப்பும் மிக மோசமாக மோதிக்கொண்டனர். பொதுக்குழுவில் மிக மோசமான வார்த்தைகளால் அவமதிக்கப்பட்டு, ஓபிஎஸ் அசிங்கப்படுத்தப்பட்டார். அவர் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்ட கொடூரம் எல்லாம் நடந்தேறியது.
வாடிய முகத்தோடு பாதி கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.

தமிழ் மகன் உசேன்
அதன்படி, மீண்டும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும். அந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றி விவாதிக்கப்படும் என்று தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அனுமதிக்கு கிடையாது. இதன் காரணமாக, இந்த பொதுக்குழு அறிவிப்பு செல்லாது. சட்டப்படி ஓபிஎஸ் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது. இதனால் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்
இந்த நிலையில்தான் இழந்த ஆதரவை மீட்பதற்காக ஓபிஎஸ் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரை சந்திக்க அவர் முடிவு செய்துள்ளார். நேற்று இதற்காக மதுரை சென்றவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார். அதன்பின் அங்கிருந்து கிளம்பி தேனி சென்றார். இன்று தேனியில் அவர் பல நிர்வாகிகளை சந்திப்பதாக இருந்தது.

தேனி
அதன்பின் பல்வேறு தென் மாவட்டங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெறும் என்று திடீரென எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எடப்பாடி பதவி வகிக்கும் கழக தலைமை நிர்வாக செயலாளர் பெயரில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு அழைப்பு
அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 - திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ் பதில் அறிக்கை
இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நாளை அதிமுக அலுவலகத்தில் நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஓபிஎஸ் தரப்பு பதில் அறிக்கை வெளியிட்டது. அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட, திட்ட விதி 20A(v)-ன்கீழ் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது.

என்ன சொன்னார்?
அதன்படி, இருவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால், இருவருடைய ஒப்புதலுமின்றி, கையொப்பம் இல்லாமல், 'கழக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம்' என்ற பெயரில் கழக சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 27-6-2022 - திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உரிமை இல்லை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம், கழக சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். கழக சட்டத் திட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், கழகத் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன நடக்கும்?
திடீரென எடப்பாடி இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டதும் இரவோடு இரவாக ஓபிஎஸ் தனது வீட்டில் அது தொடர்பாக ஆலோசனை செய்து இருக்கிறார். 3 விஷயங்களை இந்த கூட்டத்தில் அவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். அதன்படி 1. உங்களை (ஓபிஎஸ்ஸை) அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது எப்படி என்று எடப்பாடி ஆலோசனை செய்யலாம். 2. பொதுக்குழு பற்றி முக்கிய ஆலோசனைகளை செய்யலாம். 3. உங்களின் (ஓபிஎஸ்ஸின்) தென் மண்டல பயணத்தை பாதியில் தடுக்கும் வகையில் இந்த கூட்டத்தை நடத்தலாம் என்று விவாதித்து உள்ளனர்.

முக்கிய நிர்வாகிகள்
பல முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ்ஸிடம் பேசி உள்ளனர். நீங்கள் சென்னையில் இருப்பதே நல்லது. உடனே கிளம்புங்கள். தென் மண்டல பயணத்தை பின்னர் தொடரலாம்.. உங்கள் உறுப்பினர் பொறுப்பிற்கே கூட சிக்கலாகலாம் என்று அறிவுரை வழங்கி உள்ளனர். இதையடுத்து இன்று அவசர அவசரமாக ஓபிஎஸ் தேனியில் இருந்து சென்னை திரும்புகிறார். தென் மண்டல பயணத்தை பாதியில் விட்டுவிட்டு அவர் சென்னை திரும்புகிறார். இன்று காலை அதிமுக கூட்டத்திற்கு முன்பாக ஓபிஎஸ் சென்னையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications