பான் கார்டில் இனிஷியல் மட்டும் இருந்தால் செல்லாதா? வருமான வரித்துறை முக்கிய விளக்கம்.. மக்களே கவனம்
சென்னை: பான் கார்டுகளில் அப்பாவின் முழுப்பெயர் இல்லாமல், இனிஷியல் மட்டும் இருந்தால் அந்த பான் கார்டு செல்லாது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் அதுபற்றி பான் கார்டு வழங்கும் வருமான வரித்துறை முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
பான் கார்டு (PAN Card).. Permanent Account Number என்பதன் சுருக்கமே இந்த பான் கார்டாகும். இந்த பான் கார்டு தற்போது நம் நாட்டில் முக்கிய ஆவணமாக உள்ளது. குறிப்பாக வருமான வரி தொடர்பான விஷயங்களுக்கு பான் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும்.

இதுதவிர பான் கார்டு அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்யவும், Mutual Funds எனும் பரஸ்பர நிதி முதலீட்டுக்கும், கிரெடிட் கார்டு விண்ணப்பம் செய்வது உள்பட பல்வேறு நிதி சார்ந்த சேவைகளுக்கும் இந்த பான் கார்டை நம்மால் பயன்படுத்த முடியும்.
பான் கார்டை மத்திய அரசின் வருமான வரித்துறை தான் வழங்கி வருகிறது. இந்த கார்டை நாம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து பெற முடியும். பான் கார்டை பொறுத்தவரை நம் பெயர், பிறந்த தேதி, போட்டோ, முகவரி, நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்று இருக்கும்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், ‛‛பான் கார்டுகளில் தந்தையின் முழுப்பெயர் இருக்க வேண்டும். மாறாக இனிஷியல் மட்டும் இருந்தால் அந்த பான் கார்டு செல்லாது. தந்தையின் பெயருக்கு பதில் இனிஷியல் உள்ள கார்டுகளில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது'' என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.
இதனை பார்க்கும் பலரும் குழப்பமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி பான் கார்டு குறித்த சந்தேகங்கள் அவருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது வருமான வரித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛பான் கார்டுகளில் இனிஷியல் மட்டும் இருந்தாலும், இணையதளத்தில் தந்தையின் பெயரும் இணைந்தே தான் இருக்கும். ஆனால் பான் கார்டுகளில் தந்தையின் முழுப்பெயர் இல்லாமல் இனிஷியல் மட்டும் இருந்தால் அந்த பான் கார்டு செல்லாது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
இனிஷியலோடு இருக்கும் பான் கார்டுகள் ஆதார் கார்டுடன் இணைக்கும்போது மட்டுமே சிக்கல் உருவாகலாம். மற்றபடி இனிஷியலுடன் இருக்கும் பான் கார்டுகளில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்கிற தகவல் பொய்யானது. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களிலும் இனிஷியலுடன் இருக்கும் பான் கார்டுகள் செல்லாது என எங்கும் தெரிவிக்கப்படவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பான் கார்டுகளில் தந்தையின் முழுப்பெயர் இல்லாமல் இனிஷியல் மட்டும் இருந்தால் அந்த பான் கார்டு செல்லாது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் தகவல் என்பது வதந்தியாகும். இதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications