பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
சென்னை: சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்த போட்டோவை காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரங்களில் விமர்சித்து வருகிறார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛நான் பெரியவங்ககிட்ட ஆசி வாங்குவது என்ன தப்பா'' என கூறினார். இந்நிலையில் தான் பிறந்த தேதி அடிப்படையில் பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி தான் சசிகலாவை விட மூத்தவர் என்பது உறுதியாகி உள்ளதால் அவரை எதிரணியில் உள்ளவர்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் இடையே போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த வேளையில் அவர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியுடன் சிரித்தபடி சேர்ந்து இருக்கும் போட்டோ மற்றும் முதல்வராக அறிவிக்கப்பட்டபோது எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் காலில் விழுந்த போட்டோக்களை பிரசாரத்தில் காட்டி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உங்களின் ஒவ்வொரு படங்களை காட்டி பிரசாரம் செய்கிறாரே'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛படத்தை காட்டட்டும். நான் பெரியவங்ககிட்ட ஆசி வாங்குவது என்ன தப்பா. நான் அவர்களை போல் 3வது நபரிடம் ஆசி வாங்க காலில் விழலையே'' என கூறினார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி தன்னை விட சசிகலா பெரியவர் என தெரிவித்து உதயநிதியின் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையே தான் எடப்பாடி பழனிச்சாமியை விட சசிகலா பெரியவரா? என்பது பற்றிய விவாதம் கிளம்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிறந்த தேதியின் அடிப்படையில் பார்த்தால் சசிகலாவை விட எடப்பாடி பழனிச்சாமி தான் மூத்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி 20.03.1954 என்ற தேதியில் பிறந்துள்ளார். ஆனால் சசிகலா 18.08.1954ல் தான் பிறந்துள்ளார். அதன்படி பார்த்தால் சசிகலாவை விட எடப்பாடி பழனிச்சாமி தான் 5 மாதங்கள் மூத்தவர் என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் தான் சசிகலா தன்னை விட பெரியவர் அவரது காலில் விழுந்து ஆசி வாங்கியது தவறு இல்லை எனக்கூறிய எடப்பாடி பழனிச்சாமியை எதிரணியில் உள்ளவர்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஜெயலலிதாவுடன் நீண்டகாலம் நெருக்கமாக இருந்தவர் சசிகலா. மேலும் அந்த சமயத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்ததால் தான் அவரை பெரியவர் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாக அதிமுக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications