எஸ்பிஐ தரவை எடுக்க 24 நேரமே அதிகம்! அது எப்படி? நியாயமான ஒரு ‘தராசு’ கணக்கு
சென்னை: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை எஸ்பிஐ திரட்ட 24 மணிநேரம் போதும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் பாரத் ஸ்டேட் வங்கி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கெடு விதித்திருந்தது.

இந்தக் காலக்கெடு போதாது. ஜூன் 30 வரை கெடுவை நீடிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி, நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்தச் செயலை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் இந்தக் குறுகிய காலக்கெடுவை அளித்தற்கான காரணமே, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதியை 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக செலவழித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
இந்தக் காலக்கெடுவை நீடிக்கக் கோரி எஸ்பிஐ முறையிட்டிருப்பதன் மூலம் பெறப்பட்ட பணத்தை, தேர்தலில் பாஜக செலவழிப்பதற்கு மறைமுகமாக இது உதவி செய்வதைப் போல் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
எஸ்பிஐ உடனடியாக முழுத் தரவுகளை வெளியிட வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி போராட்டக் களத்தில் குதித்துள்ளது.

எஸ்பிஐ தரவுகளைக் கொடுக்க இத்தனை நாட்கள் தேவையா? டிஜிட்டல் இந்தியா காலத்தில், ஒரு வாரத்தில் அத்தனை விவரங்களையும் எடுத்துவிட முடியாதா? இது குறித்து அறிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார்.
வங்கியின் செயல்பாடு குறித்துப் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார் அவர்.

தராசு ஷ்யாம், "இதற்கு முன்பு தேர்தல் அறக்கட்டளை மூலமாகத்தான் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி வழங்க முடியும் என்று ஒரு திட்டம் இருந்தது. அது ஒரு சிறப்பான திட்டம்.
ஒரு நிறுவனம் வைத்துள்ளவர், அரசியல் கட்சிக்குப் பெரிய அளவில் நன்கொடை வழங்கவேண்டும் என்று விரும்பினால், ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு நிதியை வழங்கலாம்.

குறிப்பாக 1980களுக்குப் பிறகு இப்படித்தான் கட்சிகள் நன்கொடை பெற்றுவந்தன. அது ஒழுங்காகத்தான் நடந்துகொண்டிருந்தது.
பாஜக ஆட்சிக்கு வந்ததும் பணமதிப்பிழப்பு என்று ஒன்றைச் செயல்படுத்தினார்கள். அதன்மூலம் பணப்புழக்கத்தை முற்றாக ஒழித்தார்கள். அதைச் செய்த அதேவேகத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நன்கொடை பெறும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார்கள்.
அது பற்றி எதிர்ப்புகள் கிளம்பியதும், பாஜக வழக்கம்போல ஊழலை ஒழிப்பது, கறுப்புப் பணத்தை ஒழிப்பது, தேசத்தைப் பாதுகாப்பது எனப் பல உருட்டல்களில் ஈடுபட்டது.

பாஜக நடைமுறைப் படுத்திய சட்டத்தின் மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மட்டும்தான் தேர்தல் பத்திரத்தை விற்பனை செய்ய முடியும். புதுடெல்லியில் உள்ள கிளையில் மட்டும் 68% பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன.

ஆனால், அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிடும் எஸ்பிஐ வங்கி என்ன சொல்கிறது? நாங்கள் பல்வேறு கிளைகளிலிருந்து பத்திரங்களை விற்பனை செய்துள்ளோம்.
அந்தத் தகவல்களை எல்லாம் திரட்ட வேண்டி உள்ளது. அதற்குப் பெரிய கால அவகாசம் தேவைப்படும். எனவே காலக்கெடுவை நீட்டித்துக் கொடுங்கள் என்று எஸ்பிஐ கேட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படிச் சொல்லி இருந்தால் அது நியாயம். ஆனால், இன்று எல்லாம் பணப்பரிவர்த்தனையும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அப்படியான காலத்தில் போய் இந்த அவகாசத்தை கேட்கிறது வங்கி.

இது ஏன்? தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்கள் வெளிவந்தால், அது பாஜகவுக்கு எதிராகப் போய்விடும்.
இந்தியாவில் பொருளாதார குற்றங்களைச் செய்துவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பல பண முதலாளிகள் பாஜகவுக்குப் பெரிய அளவில் நிதி அளித்துள்ளார்கள்.
உதாரணமாகச் சொன்னால், ஸ்டெர்லைட். அதன் தாய் நிறுவனம்தான் வேதாந்தா. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்குப் பெரிய தொகை கொடுத்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

எஸ்பிஐ வங்கியால் மிகச் சர்வசாதாரணமாக எடுத்துக் கொடுக்க முடிகின்ற தரவுகளைத் தருவதற்கே கால அவகாசம் கோருகிறது வங்கி. ஏனென்றால் பாஜகவைக் காப்பாற்றத்தான்.

சாதாரணமாக ஒரு பொருளை வாங்கினாலே அதற்கு மக்கள் வரி கட்டுகிறார்கள். ஆனால், தேர்தல் பத்திரத்திற்கு வரி கிடையாது. தேர்தல் பத்திரங்களை அச்சடிப்பதற்கும், அதை விநியோகிப்பதற்குமான செலவை எஸ்பிஐ வங்கியே ஏற்றுக்கொண்டுள்ளது.
இது எவ்வளவு பெரிய முறைகேடு? ஒரு டீக் கடைக்காரரே டீ விற்றால் அதற்கான தொழில் வரியைக் கட்டுகிறார். அப்படி உள்ள நாட்டில் பல கோடிகள் நன்கொடை பெறும் கட்சிக்கு வரி கிடையாது. இது என்ன நியாயம்?

இதற்குப் பின்னால் இவ்வளவு விசயங்கள் உள்ளன. எனவேதான் பாஜக அரசு மறைமுகமாக எஸ்பிஐ வங்கியை நீதிமன்றம் நிர்ப்பந்தம் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் இதை விடவே விடாது என்றே நான் நம்புகிறேன்.
இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் ப்10 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. ஒரு பத்திரம் மூலம் 1 கோடி மட்டும்தான் வழங்க முடியும். அப்படி என்றால், 10 ஆயிரம் பத்திரங்கள் விற்பனையாகி இருக்க வேண்டும்.
ஒருவேளை 1 கோடிக்கும் கீழாகப் பத்திரங்கள் மூலம் இந்தத் தொகை பரிவர்த்தனை ஆகியிருந்தால், அப்படியே இந்தப் பத்திரங்களின் எண்ணிக்கை 20 அயிரம் முதல் 30 ஆயிரம் வரைதான் விற்பனையாகி இருக்க முடியும்.

எஸ்பிஐ சொல்வதைப் போல 30 ஆயிரம் கிளைகளிலிருந்து தகவலைத் திரட்ட வேண்டும் என்றால் கூட, கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகபட்சமாக 1 லட்சம் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளதாக வைத்துக்கொள்வோம்.
இந்த 1 லட்ச பத்திரங்களை 5 ஆண்டுகளால் கழித்தால் வருடத்திற்கு 20 ஆயிரம் பதவிகள் இருக்கும். அதில் 68% பத்திரங்கள் நியூ டெல்லி கிளையிலே விற்பனையாகி உள்ளன என்று முன்பே சொன்னேன்.
இந்தக் கணக்கு வழக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத்தான் ஜூன் வரை அவகாசம் கேட்கிறது எஸ்பிஐ.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், ஒரு தேர்தல் பத்திரத்தை யார் வாங்கினார் என்றும் அவர் யாருக்குக் கொடுத்தார் என்றும் சொல்லத் தேவையில் லை எனச் சட்டம் சொல்கிறது. அதைத்தான் உச்சநீதிமன்றம் சாட்டையடி அடித்துள்ளது" என்கிறார்












Click it and Unblock the Notifications